காரைக்காலில் சென்னையை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர், அவனிடமிருந்து 16 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் கே.எம்.ஜி. நகரை சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டினுள் நுழைந்தார். இதனைக் கண்டதும் சண்முகம் சத்தம் போடவே, அந்த மர்மநபர் அவரது வீட்டிலிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த மர்ம நபரை பிடித்து காரைக்கால் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை செய்தபோது அவர் சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த சாகுல்ஹமீது(54) என்பதும், அவர் தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, பல்லாவரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுச்சேரியில் சுல்தான்பேட்டை மற்றும் வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவர் மீது சுமார் 120 திருட்டு வழக்குகள் பதிவாகி அதில் சுமார் 70 வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்பதும், தெரிய வந்தது.
மேலும் காரைக்கால் நேருநகரில் நடை பெற்ற இருவேறு திருட்டு சம்பவங்களிலும் அவர்தான் ஈடுபட்டார் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளையனை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், முருகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, குற்றப்பிரிவு போலீசார் சிவானந்தம், பாஸ்கர், சுந்தரமூர்த்தி, சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

Post a Comment