வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேல் மாகாணங்களிலிருந்து 169 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளில் நான்கு வன்முறை சம்பவங்கள் அடங்குவதுடன் மேல் மாகாணத்திலிருந்தே அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் தொடர்பில் கொழும்பு மாவட்டத்தில் 57 முறைப்பாடுகளும் கம்பஹா மாவட்டத்தில் 23 முறைப்பாடுகளும் களுத்துறையில் 23 முறைப்பாடுகளும் பொதுவான 18 முறைப்பாடுகளுமாக மேல் மாகாணத்தில் 122 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும் மாத்தறை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 முறைப்பாடுகளும் மேலும் பொதுவான முறைப்பாடுகளுமாக 39 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு இவ்விரு மாகாணங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளிலிருந்து அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் 68 முறைப்பாடுகளும் சட்ட விரோத தேர்தல் பிரசார பணிகள் தொடர்பில் 84 முறைப்பாடுகளும் பொதுவான 13 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
குறித்த இரு மாகாணங்களிலும் சுவரொட்டிகள் பதாகைகள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கும் போது வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே அவற்றை தடுத்து நிறுத்த பொலிஸ் திணைக்களமும் தேர்தல்கள் செயலகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Post a Comment