மும்பை புதிய போலீஸ் கமிஷனர் யார் நியமிக்கப்படுவார்கள் என்பதை வைத்து, ரூ.2 ஆயிரம் கோடி அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக மராட்டிய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
பட்டியலில் 5 பேர்
மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்த சத்யபால் சிங் சமீபத்தில் தனது பதவியை ராஜினமா செய்து விட்டு பா.ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிடுகிறார்.அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனரை தேர்ந்தெடுக்க மராட்டிய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் புதிய போலீஸ் கமிஷனர் பதவிக்கு 5 உயர் போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் பரீசிலனையில் உள்ளன.முதல் பெயராக கூடுதல் டி.ஜி.பி. ஜாவேத் அக்தர், தீவிரவாத தடுப்புபடை கமிஷனர் ராகேஷ் மரியா, விஜய் காம்ளே, தானே நகர போலீஸ் கமிஷனர் கே.பி. ரகுவன்ஷி, மற்றும் சிறைத்துறை கூடுதல் கமிஷனர் மீரா போர்வன்கர் ஆகியோரது பெயர்கள் பட்டியலில் உள்ளன.
ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
இந்நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் பதவி வகிக்க யார் நியமனம் செய்யப்படுவார்கள்? என்பது குறித்து சூதாட்டம் நடைபெறுவதாக மராட்டிய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரையிலும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவில் சூதாட்டம் நடைபெற்று உள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலை பிடிப்பதற்கு போலீஸ் துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.
முன்னாள் அதிகாரி கருத்து
இது குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மும்பை போலீஸ் கமிஷனர் பதவிக்கு வருபவருக்கு நாட்டு நடப்பு, அரசியல் விதிமுறைகள், தேர்தல்களை சமாளிக்கும் திறன் இருந்தால் மட்டுமே இந்த பதவியில் நீடிக்க முடியும்.தற்போது சீனியர் அதிகாரி என்ற அடிப்படையில் ராகேஷ் மரியா கடந்த 1993–ம் ஆண்டில் நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மேற்கொண்ட அவரது அணுகுமுறையும், தீவிரவாத தாக்குதலில் நடத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் சிறந்தவையாக கருதப்படுகிறது. மேலும் அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினரின் முழு ஒத்துழைப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Post a Comment