Biz Quiz 2014 – Mercantile Quiz Championship போட்டியில் தகவல் தொழில்நுட்பம் மென்பொருள் பிரிவில் 99X Technology சம்பியனாக தெரிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் தான் பெற்றிருந்த சம்பியன்பட்டத்தை இந்து ஆண்டிலும் தக்க வைத்துக் கொண்டது.
இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் பங்குபற்றிய பல அணிகளை வெற்றி கொண்டதன் மூலம், இந்த பட்டத்தை 99X Technology தனதாக்கியிருந்தது.
குறித்த பிரிவில் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டதற்கு மேலதிகமாக, 99X Technology தரப்படுத்தலில் ஆறாமிடத்தில் 25 புள்ளிகளுடன் இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் பிரிவில் பல முன்னணி துறைசார் முன்னோடி நிறுவனங்களின் அணிகள் போட்டியிருந்தன. இதில் MillenniumIT, WSO2, Navantis மற்றும் 99X Services ஆகியன உள்ளடங்கியிருந்தன. இந்த பிரிவில் MillenniumIT(23 புள்ளிகள்) மற்றும் WSO2(22 புள்ளிகள்) பெற்று முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுக் கொண்டன.
இந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் மொத்தமாக 48 அணிகள் இடம்பெற்றிருந்தன. பங்குபற்றிய அனைத்து அணிகளும், இறுதிச் சுற்று வரை ஆக்ரோஷமான போட்டியில் ஈடுபட்டிருந்தன. சிறியளவிலான புள்ளி வித்தியாசத்தில் வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதலாமிடத்தை மக்கள் வங்கி (33 புள்ளிகள்) பெற்றுக் கொண்டதுடன், செலான் வங்கி (32 புள்ளிகள்) இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது. மேலும் டயலொக் ஆக்சியாடா (A) 31 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.
99X Technology அணியில் சிரேஷ்ட மென்பொருள் பொறியியலாளர்களான கலனமித் மன்னபெரும மற்றும் இவந்த செனவிரட்ன, இணை தொழில்நுட்ப தலைவர் மனோஷ சில்வா மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவ இணை ஊழியர் நவக நவரட்ன மற்றும் அணித் தலைவராக இணை தொழில்நுட்ப தலைவர் ஷிரந்த டி அல்விஸ் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.
இந்த ஆண்டில் 99X Technology அணி பங்குபற்றிய முதலாவது போட்டியான Biz Quiz 2014இல் வெற்றி பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். 2013 இல் பெற்றுக் கொண்ட அறிமுக Biz Quiz, the QA Wisdom Ultimate Quiz Challenge மற்றும் Transport and Logistics Quiz 2013 போன்ற வெவ்வேறு வெற்றிகளைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து டாஷிங் இவென்ட்ஸ் இந்த The Biz Quizபோட்டியை தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்தது. வர்த்தக நிறுவனங்களின் சிறந்த அறிவுத்திறன் வாய்ந்தவர்களை ஒரே களத்துக்கு கொண்டு வரும் வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி, கொழும்பு கலதாரி ஹோட்டலில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. 40 க்கும் அதிகமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அணிகள் இந்த போட்டியில் பங்குபற்றியிருந்தன.
உலகளாவிய ரீதியில் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கான வெளிக்கள சேவைகளை வழங்கும் மென்பொருள் பொறியியல் சேவைகளை வழங்கும் நிறுவனமாக 99X Technology செயற்படுகிறது. இலங்கையில் தலைமையகத்தைக் கொண்டு ஐரோப்பாவில் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. நோர்வேயின் ஒஸ்லோ நகரில் காரியாலயத்தையும் கொண்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த வர்த்தக வெளியீடுகளை வடிவமைத்த பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 2013 இல், இலங்கையில் தொழில்புரிய சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் தரப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
