GuidePedia

0


தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய துன்பக்கேணி கதையை தமது பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் எடுத்த முடிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கதையில் வரும் சில வார்த்தைகள் மற்றும் வசனங்கள் தலித் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக சென்னை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் டாகடர் தாண்டவன் கூறியுள்ளார்.
எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் தடை செய்யவேண்டும் என்று கூறுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது என்று, தலித் விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவருபவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோருகிறார்.
புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த படைப்புகளில் 1935 ஆம் ஆண்டு வெளியான துன்பக்கேணியும் ஒன்று, அதை இப்போது வாசிப்பவர்கள் அது எழுதப்பட்ட காலத்தை மனதில் கொள்ள வேண்டும் எனவும் ரவிக்குமார் கூறுகிறார்.
தமிழகத்தின் உயர்கல்விக் கூடங்களில் இலக்கியப் படைப்புகளை கூர்ந்து வாசித்து, விமர்சித்து பகுப்பாய்வு செய்யும் சூழல் இப்போது பெருமளவில் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களிடையே விமர்சனப் பார்வையைப் பரப்ப தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் தவறிவிட்டன எனவும் ரவிக்குமார் குற்றஞ்சாட்டுகிறார்.
இந்த சர்ச்சை குறித்து சென்னைப் பல்கலைகழகத்தின் துணை வேந்தரின் கருத்துக்களைப் பெற பிபிசி தமிழோசை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Post a Comment

 
Top