இந்தியாவில் தேர்தல் அறிக்கையில் கட்சிகள் இலவசங்கள்
குறித்து அறிவித்தால், அவற்றை நிறைவேற்ற தேவைப்படும் நிதி ஆதாரங்களை
வெளிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது வரவேற்கபட வேண்டுமென்றாலும்,
அதில் சில சிக்கல்கள் உள்ளன என்கிறார் முன்னாள் தலைமை ஆணையர் என்
கோபாலஸ்வாமி.
உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த ஒரு தீர்ப்பை
அடுத்து, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் குறித்து சில நெறிமுறைகள்
அறிவுறுத்தப்பட்டுள்ளன.இலவசங்களைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும்போது, அதற்கான நிதி எங்கிருந்து வரும், அது எப்படி நடைமுறைபடுத்தப்படும் போன்ற விபரங்களும் வெளியிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன என்று பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார் முன்னாள் தலைமை ஆணையர் என்.கோபாஸ்வாமி.
அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களை அமல் செய்யும்போது, சிக்கல்கள் தோன்றக்கூடும் என்றும், திட்டமிட்டதைவிட அமலாக்க நடவடிக்கையின்போது, கூடுதலாக நிதி செலவானால் அதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தெளிவில்லாமல் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறையானது உடனடியான பலனை அளிக்காது என்றாலும், நீண்டகால அடிப்படையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அது உதவும் என்று தான் நம்புவதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் என்.கோபாஸ்வாமி.

Post a Comment