தமிழக அரசு விடுவிக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேரும் எந்தவிதமான இழப்பீடும் கோரமுடியாது என்று நளினி மற்றும் முருகனின் வழக்கறிஞர் பா புகழேந்தி தெரிவித்தார்.
சட்டத்தின் பார்வையில் இவர்கள் ஏழுபேருமே இன்னமும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளே என்றும், இவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு என்பது அவர்கள் இதுவரை அனுபவித்த தண்டனைக்காலமே போதும் என்கிற கோணத்தில் எடுக்கப்பட்டிருப்பதே தவிர, இவர்கள் நிரபராதிகள் என்கிற கோணத்தில் எடுக்கப்படவில்லை என்பதே சட்டத்தின் நிலைமை என்றும் கூறினார் புகழேந்தி. எனவே குற்றத்திற்காக சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரமுடியாது என்றார் அவர்.
இந்த ஏழுபேரில், பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேர் இந்தியர்கள். முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்குபேரும் இலங்கை குடிமக்கள். இலங்கை குடிமக்களான இந்த நான்குபேருமே சிறையில் இருந்து விடுதலையான பிறகு இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று புகழேந்தி தெரிவித்தார். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை பலவந்தமாக இலங்கைக்கு இந்திய அரசால் திருப்பி அனுப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
சிறையில் இருந்து விடுதலையானபிறகு பேரறிவாளனும் ரவிச்சந்திரனும் இந்தியாவில் இருக்கும் தத்தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார் புகழேந்தி. இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமாருடைய ஒட்டுமொத்த குடும்பமும் தமிழ்நாட்டில் இருப்பதால் அவரும் தமது குடும்பத்தவருடன் தமிழ்நாட்டிலேயே தங்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
நளினியும் முருகனும் லண்டனில் இருக்கும் தமது மகளோடு சேர்ந்துவாழ லண்டன் போக விரும்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி தம்மிடம் கோரியிருப்பதாகவும் புகழேந்தி; தெரிவித்தார். ராபர்ட் பயஸின் குடும்பம் கனடாவில் இருப்பதால் அவர் கனடா செல்லவிருப்பதாகவும், சாந்தனின் சகோதரர் ஒருவர் கனடாவில் இருப்பதால் அவரும் கனடா செல்லவே விரும்புவதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்;
.
இந்த ஏழுபேரின் தண்டனைக்காலத்தைக் குறைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு கோரியிருந்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலும்கூட, அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு சட்டரீதியில் முழு அதிகாரம் இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.
அப்படி இவர்களின் தண்டனையை குறைத்து தமிழக அமைச்சரவை முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு அனுப்பினால், அதை மாநில அரசு ஒரு முறை திருப்பி அனுப்பலாம் என்றும், அப்படி மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகும் மாநில அமைச்சரவை மீண்டும் அதே முடிவை எடுத்து ஆளுநருக்கு அனுப்பிவைத்தால், மாநில ஆளுநர் அதை ஏற்று இந்த ஏழு பேரையும் விடுவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் (பிபிசி)
