மட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு சந்தியில் இன்று வியாழன் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் உட்பட சுமார் 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கரடியனாறு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கே. சுகுமார் தெரிவித்தார்.
இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பெரியபுல்லுமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பயணிகள் பஸ்ஸும் செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்ததாக விபத்தில் சிக்கியவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் கூடுதலானவர்கள் மாணவர்கள் என்றும் இவர்களில் 15 இற்கு மேற்பட்டோர் தற்சமயம் கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் சுமார் 20 இற்கு மேற்பட்டோர் சிறுகாயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வைத்தியர் கே. சுகுமார் தெரிவித்தார்.
ரிப்பர் சாரதியான அபேசிங்ஹ (வயது 34) படுகாமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.
விபத்து இடம்பெற்றதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் அழுது புலம்பிய வண்ணம் வைத்தியசாலையை நோக்கிக் குழுமியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச பஸ் வண்டியின் சாரதியும் தற்சமயம் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
