கேரள, தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்து இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், இது குறித்து தங்களின் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் எடுத்து செல்வோம் என இத்தாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக, கேரள எல்லை பகுதியில் கடந்த 2012 பிப்ரவரி மாதம் 15 ம் திகதி 2 மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டு கொன்றனர். இதில் அவர்கள் கடற்கொள்ளையர்களாக இருக்கக்கூடும் என தாங்கள் நம்பியதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக இத்தாலி படைவீரர்கள் மாசிமிலியோனா லாட்டூர், சல்வாத்தோர் கிரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். இடையில் ஜாமினில் சென்றவர்கள் திரும்பாமல் அடம் பிடித்தனர். தொடர்ந்து மத்திய அரசு கொடுத்த மிரட்டல் காரணமாக வீரர்கள் இந்தியா வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் வரும் பிப். 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு படையினர் விசாரணை நடத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவிற்காக இந்த வழக்கு தற்போது விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் போக்கு குறித்து அறிவதற்காக இத்தாலி அதிகாரிகள் டில்லியில் முகாமிட்டு நேற்று ரோம் திரும்பினர். இவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவின் சட்ட நிலை , மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைகள் பெரும் கவலை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
இத்தாலி அதிபர் கியார்ஜியோ , அந்நாட்டு செய்தி நிறுவனமான ஏ.என்.எஸ்.ஏ.,வுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் முரண்பாட்டுத் தனமான கொள்கை அரைவேக்காட்டு நடவடிக்கை எங்களை கடுமையாக பாதித்துள்ளது. இது குறித்து எங்களின் சர்வதேச ஆதரவு நாடுகள் கவனத்திற்கு எடுத்து செல்வோம். இத்தாலி வீரர்கள் மரியாதையுடன் நாடு திரும்புவர் என்றும் கூறியுள்ளார்

Post a Comment