'என் சதையை கடித்து உண்ணுங்கள்..": புலிகளுக்கு தன்னை உணவாக்க புலிக்கூண்டுக்குள் குதித்த நபர் : சீனாவில் பரபரப்புச் சம்பவம்
சீன மிருகக் காட்சிசாலையிலுள்ள புலிகளுக்கான கூண்டுக்குள் பிரவேசித்து புலிகளுக்கு தனது உடலை உணவாக அளிக்க முயன்ற மன அழுத்தத்திற்கு உள்ளான தொழிற்சாலை பணியாளர் ஒருவரை மிருகக்காட்சிச்சாலை பராமரிப்பாளர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் உயிருடன் மீட்டுள்ளனர்.
சீனாவின் சிசுவான் மாகாணத்தைச் சேர்ந்த யாங் ஜின்ஹாய், (27 வயது)என்ற நபரே இவ்வாறு புலிக்கூண்டில் பிரவேசித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் ஆரம்பத்தில் சிசுவான் மாகாணத்திலுள்ள மேற்படி செங்கு மிருககாட்சிசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியில் இணைந்தார்.
ஆனால், விரைவில் அந்த வேலை அவருக்கு சலிப்பைத் தருவதாக அமைந்ததால் அவ்வேலையிலிருந்து விலகி அந்த தொழிற்சாலையொன்றில் வேலையில் இணைந்து கொண்டார். எனினும், அந்த வேலையிலிருந்தும் இராஜிநாமா செய்த அவர் தான் உயிர் வாழ்ந்தது போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
சம்பவதினம் செங்கு மிருககாட்சிசாலைக்கு விஜயம் செய்த யாங் ஜின்ஹாய் புலிகள் இயற்கை வாழிடத்திலான தமது வேட்டையாடிக் கொல்லும் செயன் முறையைப் பின்பற்றி முடியாத நிலையிலுள்ளதைப் பார்க்கும்போது தனக்கு பெரிதும் மன அழுத்தமாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தன்னை அவற்றுக்கு தியாகம் செய்யவுள்ளதாக அறிவிப்புச் செய்தார். அதன்பின் பெருமளவு பார்வையாளர்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க புலிக்கூண்டில் ஏறி உள்ளே குதித்த அவர் புலிகளைச் சுற்றி நடனமாடியதோடு தன் சதைகளை கடித்து உண்ணுமாறு புலிகளிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆண் புலியொன்று யாங் ஜின்ஹாய் மீது பாய்ந்து அவரைக் கடிக்க தயாராகியுள்ளது.
எனினும், மிருகக்காட்சிசாலை பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் சிராய்ப்பு காயங்களுடன் அவரை மீட்டுள்ளனர்.

Post a Comment