மியான்மர்அதிபர் தியன் சியன் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு இன்று 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை விமானநிலையத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மியான்மர் அதிபர் தியன் சியனின் சுற்றுப்பயணத்தின்போது, மியான்மர் நாட்டின் ஜனநாயக ரீதியான வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா பல்வேறு நிதியுதவிகளை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மியான்மர் நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதுடன், இருநாட்டு உறவு மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மியான்மர் அதிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்