குருத்தணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்தியேக மருத்துவ சிகிச்சைமுறையை உருவாக்க உதவக்கூடிய பெரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஒன்றை தாங்கள் எட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். இரத்த அணுக்களை அமிலத்தில் தோய்த்து எடுப்பதன் மூலம் குருத்தணுக்களை உருவாக்க முடியும் என்று ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் காட்டியிருக்கிறார்கள்.
இந்த முடிவு ‘நேச்சர்’ என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் வரை, இதற்காக, தோல் அணுக்கள் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டியிருந்தது. ஆய்வாளர்கள் எலிகளின் இரத்தக் கலங்களை வைத்து ஆராய்ச்சியை நடத்தினர்.
இதேமுடிவுகளை இனி அவர்கள் மனித இரத்தத்தை வைத்து எட்ட முடியுமா என்று பார்ப்பார்கள். எந்த ஒரு திசுவாகவும் மாறக்கூடிய இந்தக் குருத்தணுக்கள் இதயம், கண்கள் மற்றும் மூளையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும் பரீட்சார்த்த முயற்சிகளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்தப் புதிய தொழில்நுட்பம், குருத்தணுக்களை உருவாக்கும் வழிகளை மேலும் விலை மலிவானதாகவும், விரைவானதாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் வகையிலான ஒரு தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சை கிடைக்கக்கூடிய ஒரு காலத்தைத் தொடங்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Post a Comment