தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவட்ராவுக்கு அரசாங்க அரிசி உதவி திட்டம் ஒன்று சம்பந்தமாக அலட்சியத்துடன் செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் ஆஜராகி விளக்கமளிக்க அந்நாட்டு ஊழலுக்கு எதிரான அமைப்பொன்று உத்தரவிட்டுள்ளது.
மேற்படி அரிசி உதவி வழங்கல் திட்டத்தில் கடும் ஊழல் இடம்பெற்றுள்ளதான யின்லக் ஷினவட்ராவின் எதிராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அரசியலில் பங்கேற்ற 5 வருட கால தடையையும் எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை தலைநகரிலிருந்து வடநகரான சியாங் ராய்க்கு சென்றுள்ள யின்லக் ஷினவட்ரா, தேசிய ஊழலுக்கு எதிரான ஆணையகத்தில் இடம்பெறும் விசாரணைகளில் ஆஜராகமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது சட்டத்தரணி விசாரணைகளில் ஆஜராகி விளக்கமளிக்கலாம் என தேசிய ஊழலுக்கு எதிரான ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள பிரதமர், எனினும் உண்மையை வெளிக்கொணரும் முகமாக மேற்படி ஆணையகத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக கூறினார்.
யின்லக்கின் அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக விளங்கும் அரிசி உதவி திட்டம் உலக விலைகளுடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு அதிகமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்ய வழிவகை செய்கிறது.
விவசாயிகள் மத்தியில் ஆரம்பத்தில் பிரபலம்பெற்ற இந்தத் திட்டம் தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதியை கடுமையாக பாதித்து குறைந்தது 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இழப்பீட்டுக்கு வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது.
இந்நிலையில் மேற்படி கொள்கை உருவாக்கம் மட்டுமே தனது எனக்கூறிய யின்லக், அந்த திட்டத்தின் நாளாந்த அமுலாக்கத்திற்கு தான் பொறுப்பாக இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே யின்லக் மீதான புதிய குற்றச்சாட்டு விசாரணை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்கொக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறை தாக்குதல்களில் 4 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
அங்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.

Post a Comment