GuidePedia

0
வவுனியா நகரசபையில் நீண்ட காலமாக அமைய ஊழியர்களாக பணியாற்றி வரும் 43 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த 03.02.2014 அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றமை நீங்கள் யாவரும் அறிந்ததே.
அந்த நிகழ்ச்சியில், பலரும் பார்க்க மறந்து போன இன்னோரன்ன பல விசயங்கள்! இதோ.
கால் கடுக்க காத்திருக்க வைத்த முதலமைச்சரும், அமைச்சர்களும்!
குறித்த நிகழ்ச்சி 4.30 மணிக்கு நடைபெறும் என்று அழைப்பு விடுத்தலின் போது அனைவருக்கும் சொல்லப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வடக்கின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வர்த்தக வணிகத்துறை மத்திய அமைச்சர் ரிசாட் பதியூதீன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரை “பாண்ட்” வாத்திய இசை அணி வகுப்பு மரியாதையுடன், பிரதான நுழைவாயிலிருந்து மண்டப வாயில் வரை அழைத்து செல்வதென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
“பாண்ட்” வாத்திய இசை அணி வகுப்பு மரியாதையை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வவுனியா சைவப்பிரகாசா மகாவித்தியாலய மாணவிகள் 3.30 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்து விட்டனர்.
மாணவிகள் அணி வகுத்து சிறு “ட்றையல்” பார்த்து விட்டு, பாண்ட் வாத்தியங்கள் சகிதம் “ஸ்மார்ட்டாக” தரித்து நின்றனர். தமது தோள்கள் மற்றும் கைகளை வாத்தியங்களின் சுமைகள் அழுத்த அழுத்த கால் கடுக்க அவர்கள் தரித்து நின்றும் அதிதிகள் வந்து சேர்ந்த பாடில்லை.
சலிப்படைந்த அவர்கள் சீர் குலைந்து வீதியின் ஓரங்களுக்கு சென்று வாத்தியங்களின் சுமையை இறக்கி வைக்க தயாரான போது, “இதோ முதலமைச்சர் இன்னும் 5 நிமிசத்தில வந்திடுவார்.” என்று யாரோ உற்சாக குரல் கொடுத்தார்கள். (அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக இருக்கக்கூடும்)
குரல் கேட்டதும், மறுபடியும் மாணவிகள் இசை கருவிகளை தோளில் மாட்டிக்கொண்டு அணி வகுப்புக்கு தயாராகி விட்டனர். 5 நிமிசம் 55 நிமிசங்களாகி விட்டன. அதிதிகள் வந்து சேர்ந்ததாயில்லை. மீண்டும் ஏமாற்றம். மீண்டும் அலைக்கழிப்பு. மீண்டும் மன உளைச்சல்.
சோர்வடைந்து களைந்து போய் பக்கத்திலிருந்த மதில்களில் கால்களை ஊன்றியும், முட்டுக்கொடுத்தும் சாய்ந்தவாறு நம்பிக்கையிழந்து இருந்தனர் மாணவிகள். மீண்டும் அதே குரல். “இந்தா சீ.எம் பக்கத்தில வந்திட்டாராம்.”
இப்படி சொல்லிச்சொல்லியே ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஐந்து அல்லது ஆறு தடவைகள் மாணவிகளை வாட்டி வதக்கி எடுத்து விட்டனர். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தம் பிள்ளைகள் சுமையான இசைக்கருவிகளை தாங்கிக்கொண்டு தோள் வலியாலும், கை கால் உளைச்சல்களாலும் அவஸ்தைபட்டுக்கொண்டிருப்பதை பார்த்து பார்த்து அவர்களது பெற்றோர்களும், பொறுப்பான ஆசிரியர்களும் கலவரமடைந்து விட்டனர்.
அதேநேரம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றரை மணித்தியாலங்களாக அவ்விடத்தில் காத்திருந்தனர்.
5.30 மணிக்கு பின்னர் முதலமைச்சரும், அமைச்சர்கள் இருவரும் வந்திறங்கியதும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கால தாமதமான இரண்டு மணித்தியாலங்களும் நடந்தது என்ன?
வவுனியாவிலுள்ள அமைச்சர் சத்தியலிங்கத்தின் பிரத்தியேக இல்லத்தில் முதலமைச்சரும், ரிசாட்டும், சத்தியலிங்கமும் கூட்டாக இணைந்து சுவாரஸ்யமாக பல விடயங்களை சிரித்து சிரித்து பேசிக்கொண்டு அறுசுவை விருந்துண்டு களித்திருந்தனர். (இதை ஒரு சிலர் மந்திராலோசனை என்று சொல்கிறார்கள். “பால் நிறத்திலும் கள்” இருப்பதை நாம் அநுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருப்பதால், வேண்டுமானால் சதியாலோசனை என்று மட்டும் இதை சொல்லி விட்டுப்போகலாம்.)
அதன் பின்னரே, “நேர முகாமைத்துவத்துக்கு முன்மாதிரியாக” மூவரும் நிகழ்ச்சிக்கு சமுகமளித்திருந்தனர்.
ரிசாட் பேசும் போது, “இதற்கு முன்னர் பத்திரிகைகளில் உங்களுடைய அறிக்கைகள், உங்கள் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் உங்களுக்கு இருந்ததுண்டா? இது நீங்கள் எதிர்பார்த்த ஒன்றா?” என்று இப்போது தான் அவரை பார்த்து கேட்டேன். (மேடையில் இருவருக்கும் பக்கத்து பக்கத்து ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன) அதற்கு அவர், “இல்லை இல்லை, இல்லவே இல்லை. சிறிது கூட எனக்கு விருப்பம் இருந்ததில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்ததே இல்லை.” என்று, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாக ரிசாட் புகழ்ந்து பேசினார்.
பதிலுக்கு “மைக்” பிடித்த வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், “தேர்தலை இலக்கு வைத்து செயல்படாமல், அபிவிருத்தி நோக்கி பணியாற்ற வேண்டும். கூடவே தமிழ் முஸ்லிம் உறவையும் கட்டியெழுப்ப வேண்டும்.” என்று தொனிப்பட பேசி அமர்ந்தார்.
அடுத்து மேடையேறிய செல்வம் அடைக்கலநாதன், “இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. அமைச்சர் (ரிசாட்) எங்களுடன் இருப்பது மிகப்பெரிய விசயம்!” என்று உணர்ச்சி வயப்பட்டு பேசினார்.
தமிழ் பேசும் உலக உறவுகளே!
வட மாகாணசபை ஊடாக, நல்லாட்சி ஒன்றை அமைப்பதற்கு பெரும் தடையாக “பிரதம செயலாளர்” இருப்பதாக முதலமைச்சர் உட்பட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வட மாகாணசபையை ஒரு அடி தானும் முன்நோக்கி நகர்த்தி விட முடியாதவாறு, கூட்டமைப்புக்கு வைக்கப்பட்டிருக்கும் “செக்”கே, விஜயலெட்சுமி தான்! அந்த செக்கை வைத்தவரே ரிசாட் தான்!
அத்தோடு முஸ்லிம் இனத்துக்கே பெரும் “டேஞ்ஜர் மேன் ரிசாட்” என்று, அதே இனத்தை சேர்ந்த ரவூப் ஹக்கீம்மே பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதற்கும் அப்பால் மன்னார், மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்களை ஏவி விட்டு, 03.02.2014 அன்று காலை வவுனியா கச்சேரிக்கு முன்பாக கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வித்து, பதாதைகளை தீயிட்டு எரிக்க வைத்த ரிசாட்டுக்கு, 03.02.2014 அன்று மாலையே விருந்து கொடுத்து புகழ்ந்து பேசிய இவர்களா தமிழ் மக்களின் இராஜதந்திரிகள்?
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள்? இதனால் யார் யாரெல்லாம் அக மகிழ்ந்தார்கள்? எதிர்பாருங்கள்…
தமிழ் சி.என்.என் செய்தித்தளத்தின் வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-
SAM_7338
SAM_7340
SAM_7342
SAM_7344
SAM_7345
SAM_7346
SAM_7350
SAM_7352
SAM_7354
SAM_7356
SAM_7358
SAM_7360
SAM_7384
SAM_7387
SAM_7418

Post a Comment

 
Top