இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 121 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடிதமொன்றை எழுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
இலங்கை கடற்படையால் கடந்த 13.2.2014 அன்று 29 தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். பாக்ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய பகுதியில் மீன் பிடிப்பதை இலங்கை கடற்படை தடுத்து வருவது தொடர்கதையாகி உள்ளது.
மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் ஒவ்வொருவரும் சிங்கள கடற்படையின் தாக்குதல், சித்ரவதை, சிறைபிடிப்பு போன்ற அச்சுறுத்தலை எதிர் நோக்கியே செல்கின்றனர்.
சென்னையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்த பிறகு இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்துவிட்டது.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டு வரும் நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் இலங்கை கடற்படையினரின் செயல்பாடு உள்ளது.
கடந்த 13.2.2014 அன்று இராமேஸ்வரம் மண்டபம் (வடக்கு) மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 29 மீனவர்கள் இலங்கை கடற்படையால் 7 இயந்திர படகுகளுடன் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மஜிஸ்திரேட் நீதினமன்றில் 24.2.2014 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய 5 மாவட்ட கடலோர மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரம் இந்திய அரசின் 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் செய்யப்பட்ட தவறான ஒப்பந்தங்களால் இலங்கை கடற்படையின் அத்துமீறல் காரணமாக முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதை நான் உங்களுக்கு இதற்கு முன்பு எழுதி கடிதங்களில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
இந்த ஒப்பந்தங்கள் நமது மீனவர்கள் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி இந்தியாவின் இறையாண்மையையும் பறித்து சென்றுள்ளது. என்றாலும் இந்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை பற்றி இன்னமும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தொடர் தாக்குதல்களை வலுவான தூதரக நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.
இலங்கை கடற்படையால் கடத்தி செல்லப்பட்ட 121 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது 26 படகுகளும் இலங்கையிடம் உள்ளது.
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 121 பேரையும் உடனே மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தூதரக அளவில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment