சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனாவில் யாத்திரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 15 பேர் பலியானதுடன் 130 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நகரில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள மேற்படி ஹோட்டலில் சனிக்கிழமை மாலை இந்த தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது அந்த ஹோட்டலில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 பேர் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி தீ அனர்த்தத்தில் பலியானவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்படவில்லை.
பலியானவர்களில் சிலர் எகிப்தியர் என எகிப்திய தொலைகாட்சி நிலையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ அனர்த்தத்தில் தமது நாட்டுப்பிரஜைகள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்த தாம் முயன்று வருவதாக எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள எகிப்திய வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் பட்ர் அப்டெலாற்றி தெரிவித்தார்.
ஹோட்டலில் பரவிய தீ பல மணி நேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் அந்த நகரிலுள்ள ஏனைய ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி தீ அனர்த்தத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment