வடக்கில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இவர்களின் குடும்பங்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகைதந்த இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் கிரேட் லொச்சன் உள்ளிட்ட குழுவினர் முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பினையடுத்து கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கையில்.
வடக்கு மாகாணத்தில் எப்பேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பாகவும் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபை எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது பற்றியும் பேசப்பட்டன.
இதேவேளை வடக்கில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் பொருளாதார ரீதியில் அந்தக் குடும்பங்களை முன்னேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது தற்போதுள்ள முக்கிய தேவையாகவுள்ளது.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பல உதவிகள் செய்யப்பட வேண்டியுள்ளது போன்ற பலவிடயங்களை எடுத்துக்கூறியதாக அவர் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment