இலங்கையில் ஃபேஸ்புக்- சமூக வலைத்தளத்தை தடைசெய்வதற்கு
அரசாங்கம் முயன்று வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி
குற்றஞ்சாட்டுகிறது.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைத்
தவிர்ப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் அக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை
நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தினால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக இலங்கை காவல்துறை கூறியுள்ளது.
குறிப்பாக, பெண் பிள்ளைகள் ஃபேஸ்புக் பயன்படுத்தும்போது அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.
'உலகில் மற்ற பல நாடுகளைப் போல இலங்கையிலும் குடும்பத் தகராறுகளுக்கும் தற்கொலைகளுக்கும் முக்கிய காரணமாகின்ற ஒரு விடயமாக ஃபேஸ்புக் மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் பேஸ்புக் விடயத்தில் சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார் காவல்துறை பேச்சாளர்.
கடந்த ஆண்டில் ஃபேஸ்புக் சம்பந்தப்பட்ட 30 முறைப்பாடுகள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளன.
அண்மைக் காலத்தில் இலங்கையில் பள்ளி மாணவி ஒருவரினதும் இளம் யுவதி ஒருவரினதும் மரணங்களுக்கு ஃபேஸ்புக் தளமே காரணம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
சமூகப் பிரச்சனைகளா- அரசியல் பிரச்சனைகளா?
ஃபேஸ்புக்- பாவனை தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கவனித்துவருகிறோம்- அமைச்சர் கெஹெலிய
அவரது சகோதரரானபாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வந்துமுடியும் என்று கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அரபுலக வசந்தம் என்ற புரட்சியைப் போல இலங்கையிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் அரச எதிர்ப்புணர்வுகளைக் கிளறிவிடுமோ என்ற பயத்திலேயே அரசிடமிருந்து இவ்வாறான கருத்துக்கள் வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.
'ஃபேஸ்புக் அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. அதில் வருகின்ற பெரும்பாலான செய்திகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றன. அதனால், ஃபேஸ்புக் மீது வேறு சமூகப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அதனைத் தடைசெய்துவிடலாம் என்று அரசு முயற்சிக்கிறது' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ.
'மரத்திற்குப் பின்னால் ஒருவர் மறைந்துநின்று துப்பாக்கியால் சுட்டார் என்பதற்காக, சுட்டவரைப் பிடிக்காமல் அந்த மரத்தை வெட்டிவிடுவது சரியாகுமா' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
'தற்கொலைகள் இலங்கையில் புதிதல்ல, இளைஞர்களை வழிநடத்துவதற்கான கல்விக் கட்டமைப்புகள் நாட்டில் இல்லை': சமூகவியலாளர்கள்
இதுபற்றி, பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே, 'இலங்கையில் இளைஞர் யுவதிகளிடத்தில் தற்கொலைகள் 1990-களிலிருந்தே பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது' என்றார்.
'சமூகத் தொடர்புகளை வளர்த்துக்கொள்வது என்பது சமூகத்துக்கு முக்கியமானது. அந்த சமூகத் தொடர்புகளை பயனுள்ளவையாக மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தான் நமது கல்வி முறையில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சமூகப் பிரச்சனைகளுக்கு பேஸ்புக் போன்ற நவீன ஊடகங்கள் காரணம் என்று கூறி அவற்றை கட்டுப்படுத்துவதோ அல்லது தடைசெய்வதோ ஒரு போதும் தீர்வாக அமையாது' என்றும் பேராசிரியர் சிறி ஹெட்டிகே கூறினார்.

Post a Comment