GuidePedia

0
கர்ப்ப காலத்தில் பெண்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நாள்கள், உடல் எடையைப்பேணல், சத்துணவு, சுகாதாரம், சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள், செய்ய மற்றும் தவிர்க்க வேண்டிய பயிற்சிகள், பாவிக்க வேண்டிய மருந்து மாத்திரைகள் போன்ற ஆலோசனைகளை வழங்குவதும், மகப்பேற்றை கண்காணிப்பதும் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களின் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) பணியாகும்.
இவர்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும், போதனா, மற்றும் பொது வைத்தியசாலைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை தாதியர்களுக்கு பயிற்றுவித்து விட்டு, அவை தொடர்பான கல்வியறிவை தாதியர்களுக்கு போதித்து விட்டு, பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களை (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) வெளியகப்பணிகளுக்கு அமர்த்த சிறீலங்கா சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
“வைத்தியசாலை பணிகளில் இருந்து தம்மை வெளியேற்றி, வெளியகப்பணிகளுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,” நாடு தழுவி கடந்த 30.01.2014 முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா பொதுச்சுகாதார உத்தியோகத்தர் சங்கமும் 01.02.2014 இல் இருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது.
நேற்று (01.02.2014) அவர்கள், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (MOH) காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மருத்துவ தேவைகளை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்களுக்கு, பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் தன்மை, அதன் நோக்கம் பற்றி எடுத்துக்கூறி பொதுமக்களை திருப்பியனுப்பினர். போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொண்டு பலர் 1.00 மணிக்கு பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் காத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென வாகனத்தில் தனது பிள்ளையுடன் வந்திறங்கிய பதில் கடமை வைத்திய அத்தியட்சகர் (AMS) தனது பிள்ளைக்கு தடுப்பூசி போட வேண்டும். உடனடியாக போடுமாறு நிர்ப்பந்தித்தார். பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) அரசுக்கு எதிரான தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் பற்றி அவருக்கு எடுத்துக் கூறியும், அவர் தனது பிள்ளைக்கு தடுப்பூசி போட்டேயாக வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.
அங்கு தாதியாக கடமையாற்றும் பதில் கடமை வைத்திய அத்தியட்சகரின் (AMS) மனைவியும், அவர் கூட சேர்ந்து கொண்டு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களை (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) சரமாரியாக திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
பதில் கடமை வைத்திய அத்தியட்சகர் (AMS) தனது கைப்பேசியில் யார் யாருக்கோ எல்லாம் அழைப்பு எடுத்தார். அவரது அழைப்பையடுத்து, யாரோ ஒரு மேலதிகாரியால் தடுப்பூசியை போட்டு விடுமாறு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களுக்கு (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) பணிக்கப்பட்டது.
அவர்கள், “தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளியே கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என பொதுமக்கள் பலர் காலையிலிருந்து காத்திருப்பதாகவும், பலரை திருப்பி அனுப்பி விட்டதாகவும், எனவே எவருக்கும் தாம் சலுகை காட்ட முடியாதெனவும், அப்படி செய்வது முறையல்ல எனவும், 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். அதற்கு பின்னரே தாம் வைத்திய சேவையை வழங்க முடியும்.” எனவும் கூறியுள்ளனர்.
பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களின் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) மறுப்பையடுத்து பதில் கடமை சுகாதார வைத்திய அதிகாரியால் (AMOH) பதில் கடமை வைத்திய அத்தியட்சகரின் (AMS) பிள்ளைக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த சம்பவத்தை பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) தமது கைப்பேசிகளில் ஒளிப்படம் எடுத்தபோது, “எடு எடு நல்லா எடு, உங்களால இதை வைச்சு என்ன பண்ண முடியும்?” என்று பதில் கடமை வைத்திய அத்தியட்சகரின் (AMS) மனைவி அகங்காரமாக கூறியுள்ளார்.
தனது பிள்ளைக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர், பதில் கடமை வைத்திய அத்தியட்சகர் (AMS), பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களையும், (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) அவர்களில் தன் பிள்ளைக்கு தடுப்பூசி போட முடியாது என்று மறுப்பு தெரிவித்தவர்களையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.
அவரது வாகன சாரதி, “பணி இடம் மாற்றம் கிடைத்து வவுனியா வைத்தியசாலைக்கு வருவீர்கள் தானே, அப்போது உங்களை அங்கு வைத்து கவனித்துக்கொள்ளுகின்றோம்.” என்று பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களை (குடும்ப நல உத்தியோகத்தர்கள்) நோக்கி எச்சரிக்கை செய்து விட்டு, பதில் கடமை வைத்திய அத்தியட்சகரின் (AMS) பின்னால் நடையை கட்டினார்.
தமிழ் சி.என்.என் இன் வடபிராந்திய புலனாய்வுச் செய்தியாளர்,
-கழுகுகண்-

Post a Comment

 
Top