சர்வதேசத்திற்கு விலை போகும் நாட்டை காட்டிக்கொடுத்து தம்மில் தங்கி வாழும் கைப்பொம்மை அரசாங்கத்தினை அமைக்கவே ஜெனிவா தீர்மானத்தின் மூலம் சர்வதேசம் முயற்சிக்கின்றது. சர்வதேச விசாரணைக்கு அஞ்சி நாட்டை காட்டிக்கொடுக்க நாம் ஒரு போதும் தயாரில்லை. நாம் சர்வதேசத்திற்கு அஞ்சவும் மாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். 
இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களே வடக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் மத்தியில் வடக்கு மாகாணத்தை அரசாங்கத்தின் மோசமான அடக்கு முறை மாகாணமாக சித்தரிப்பது தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நடத்தப்பட்ட தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் பாரம்பரியத்தையும் எமக்கான சுதந்திரத்தினையும் அமைத்துக் கொள்ளும் நோக்குடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை உருவாக்கினார். அவர் ஆட்சியமைத்ததும் நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வரவேண்டும். வடக்கு தமிழ் மக்களைக் காப்பாற்றி நாட்டின் அமைதியினை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அதேபோல் அவர் நினைத்ததைப் போலவே குறுகிய காலத்திற்குள் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டார்.
சர்வதேச நாடுகளின் மத்தியில் இன்று அரசாங்கத்தின் மீது தவறானதொரு பார்வை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இறுதி யுத்தத்தில் உயிர் கொலைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். விடுதலைப் புலிகளைக் கொன்று வடக்கின் மக்களை பாதுகாத்தமை மனித உரிமை மீறலா? முப்பது வருடம் நாட்டிற்கு சாபக்கேடாக அமைந்த பிரிவினைவாத யுத்தத்தினை முற்றாக அழித்து மூவின மக்களையும் ஒன்றிணைத்துள்ளோம். யுத்தத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீண்டும் அரசாங்கம் குடியமர்த்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் 12 ஆயிரத்து 800 விடுதலைப்புலி தீவிரவாதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களும் சமூகத்தின் நல்ல பிரஜைகளாக மாற்றப்பட்டுள்ளனர். யுத்த கால கட்டத்தில் கைது செய்யப்பட்ட 4500 இற்கும் அதிகமான தீவிரவாதிகளுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கில் விடுதலைப் புலிகளினால் விதைக்கப்பட்டிருந்த மிதிவெடிகளை குறுகிய காலத்தினுள் இராணுவ உதவியுடன் அகற்றி வடக்கை சுதந்திரமான அமைதி பூமியாக மாற்றியுள்ளோம். இன்று வடக்கில் இராணுவத்தினர் அகற்றப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதியாக ஜனநாயகத்தினை நிலைநாட்டும் வகையில் வட மாகாண சபை தேர்தலை நடத்தி தமிழ் பிரதி நிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே ஆட்சி நடத்தப்படுகின்றது.
இத்தனை நல்ல விடயங்கள் யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்தும் இன்று இலங்கை அரசாங்கத்தினை கொலையாளிகளாகவே சித்தரிக்கின்றனர். குறிப்பாக மேலைத்தேய நாடுகளுக்கு ஏற்றாற்போல் கைப்பொம்மை அரசாங்கத்தினை இலங்கையில் அமைத்து இலங்கையில் வளங்களையும் சொத்துக்களையும் மற்றும் மனித வளங்களையும் சுரண்டி சர்வதேசத்தின் அடியாளைப் போன்றதொரு அரசாங்கத்தினை அமைக்கவே ஜெனீவா தீர்மானங்களின் மூலம் சர்வதேசம் முயற்சிக்கின்றது எனவும் சர்வதேச விசாரணைகளுக்கு அஞ்சி இலங்கையை காட்டிக் கொடுக்கவோ, இலங்கை இராணுவத்தின் உயிர்த்தியாகத்தின் மூலம் பெற்ற வெற்றியினை தாரை வார்க்கவோ நாம் இடமளிக்க மாட்டோம். அதேபோல் சர்வதேச விசாரணைகளுக்கு அஞ்சவும் போவதில்லை. அனைத்து செயற்பாடுகளுக்கும் தைரியமாக முகம் கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.
இம்முறை மாகாண சபை தேர்தலில் வெறுமனே வேட்பாளர் தெரிவுத்தேர்தலாக அமையப் போவதில்லை. அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அனைத்து மக்களின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் தேர்தலாகவும் சர்வதேசத்திற்கு பதிலடி கொடுக்கும் தேர்தலாகவும் அமைந்துள்ளது. அனைத்து மக்களும் எதை விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் கால கட்டமிது. இலங்கையில் அனைத்து மாகாணங்களும் சமமாக நடாத்தப்படுகின்றது என்பதை சர்வதேசம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சர்வதேசத்தின் மத்தியில் பரப்பப்பட்டு வரும் கட்டுக் கதைகளுக்கும் வடக்கை அரசாங்கத்தின் அடக்கு முறை பூமியாக சித்தரிப்பதற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படவே இம்முறை தேர்தல் இடம்பெறுகின்றது. எனவே அனைத்து மக்களும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாட்டையும் சமூகத்தினையும் காப்பாற்ற கைகோர்க்க வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சிகளுக்கும் நல்லதோர் பாடத்தினை புகட்ட வேண்டும் என்றார்.

Post a Comment