துபாயை சுற்றிப்பார்க்க வந்த லெபனான் பெண்ணை அத்துமீறி முத்தமிட்ட பாகிஸ்தான் வாலிபரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
லெபனான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் கடந்த நவம்பர் மாதம் துபாய் நாட்டுக்கு சுற்றுலா வந்தார். மெட்ரோ ரெயிலில் ஏறி ஜுமெய்ரா லேக் டவர்ஸ் நிலையத்தில் வந்திறங்கிய அவர், அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று, ஒரு முகவரியை காட்டி, ‘இந்த இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும்?’ என்று கேட்டார்.
அந்த ஓட்டலின் ஊழியர் ஒருவர் அவருக்கு வழிகாட்டுவதாக கூறி அழைத்து சென்றார். அருகாமையில் இருக்கும் டாக்சி ஸ்டாண்டுக்கு சென்ற அவர், டிரைவரிடம் முகவரியை கூறி அந்த பெண்ணை டாக்சியில் அமர வைத்தார்.
டாக்சி புறப்படும் நேரம் பின்கதவை திடீரென்று திறந்த ஓட்டல் ஊழியர், ஆவேசத்துடன் அந்த பெண்ணின் மீது பாய்ந்து, அவரது உதட்டில் முத்தமிட முயன்றார். பதறிப்போன அந்த பெண் அவரிடமிருந்து விலக முயற்சிப்பதற்குள் அந்த வாலிபரின் முத்தம் அந்த பெண்ணின் கன்னத்தில் பதிந்தது.
டாக்சியை விட்டு கீழே இறங்கிய அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்த 29 வயது வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த லெபனான் பெண் அளித்த புகாரையடுத்து அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் துபாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
