இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி முனைப்புக்களை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா கோரும் என தெ டெலிகிராப் செய்தித்தாள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவும் அமெரிக்காவும் பிரயோகித்து வரும் அழுத்தங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் எனக் குறி;ப்பிடப்படுகிறது.
கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தம் காரணமாகவே கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை எனத்; தெரிவிக்கப்படுகிறது.
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் கொழும்புடனான உறவுகளின் அடிப்படையிலானதல்ல எனவும், அரசியல் காரணிகளின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்தியா தலையீடு செய்யாமை தமிழக மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை இலக்காகக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
