மாத்தளை வைத்தியசாலை வளாகத்தின் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரியை இரசாயனப் பகுப்பாய்வுக்குட்படுத்தும் வகையில் அவற்றை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள பீட்டா எனலிடிக் ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி எலும்புக் கூடுகளை அமெரிக்க ஆய்வகத்தின் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பணிப்புரை விடுத்திருப்பதாக மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் தலைவரும், முன்னாள் நீதியரசருமான எஸ்.ஐ. இமாம் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை சீனாவின் பீஜிங்கிலுள்ள பீஜிங் பல்கலைக்கழக இரசாயனப் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைப்பதற்கே முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும் மேற்படி ஆய்வகத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் காரணமாகவே தற்போது அமெரிக்க ஆய்வகத்தை தெரிவு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்லேகொட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.எல்.பி.கே. அத்தபத்து மற்றும் விசாரணைக் குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ.இமாம் ஆகியோர் தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் விசாரணைகள் இடம்பெற்றன.
மாத்தளை செயலகத்தில் இடம்பெற்ற இவ்விசாரணைகளின் போது, 66 பேரிடம் விசாரணைகள் நடத்தி வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
மாத்தளை மாவட்ட முன்னாள் சட்ட வைத்திய நிபுணர் அஜித் ஜயசேன மேற்படி வாக்கு மூலங்களைப் பதிவு செய்தார்.
இதன் முடிவிலேயே விசாரணைக் குழுவின் தலைவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

Post a Comment