மகசின் சிறைச்சாலையின் 'சி' பிரிவின்
மலசலக்கூடமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தமிழ் அரசியல்
கைதியான விஸ்வலிங்கம் கோபிதாஸின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என
பிரேத பரிசோதனையின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் மாலை
கிடைக்கப்பெற்ற குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையினூடாக அந்த
அரசியல் கைதியின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என உறுதி
செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர்
காமினி குலதுங்க தெரிவித்தார்.
இதயத்திற்கு செல்லும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட சடுதியான அடைப்பு
காரணமாக அக்குழாய் வெடித்ததிலேயே அரசியல் கைதியான விஸ்வலிங்கம்
கோபிதாஸின் மரணம் சம்பவித்துள்ளதாகவும் இந்த மரணமானது ஐந்து
நிமிடங்களுக்கும் குறைவான காலப்பகுதிக்குள் நிகழ்ந்துள்ளதாகவும்
பிரேத பரிசோதனை அறிக்கை சுட்டிக்காட்டுவதாக சிறைச்சாலைகள்
திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி குலதுங்க மேலும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி அளித்தார் என்ற
குற்றச்சாட்டில் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த
கோபிதாஸ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாக
இனங்காணப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டைனையின் கீழ் மகசின்
சிறைச்சாலையில் தண்டனைப் பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை
காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 42 வயதான கோபிதாஸின் மரணம் குறித்து பல்வேறு
தரப்பினரும் சந்தேகங்களை தோற்றுவித்த நிலையிலேயே கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கை யில் அது
இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment