எனக்கு சிரிப்புத்தான் வந்தது. புலி என்று சொல்லி ஒரு பூனையைப் பிடித்து கூட்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
தடுப்புக் காவலுக்கு வந்து இரண்டு மாதமாகிறது. மனோ நிலையில் நிறையை மாற்றங்கள். நீண்ட தியானத்தின் பின்னர் கிடைக்கும் அமைதி இப்படித்தான் இருக்கும் என்பதை எனக்குச் சொல்லித் தருவது போல உள்ளம் மிகமிக அமைதியாக இருந்தது.
எவனோ ஒரு கவிஞன் தனிமையைக் கொடுமை என்று வர்ணித்திருந்தான். அவனது கன்னத்தில் பளார் பளாரென்று இரண்டு கொடுக்க வேண்டும் போல இருந்தது. வாழ்க்கையில் வரும் சகல பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவும், எத்தனை பெரிய சவாலாயினும் அதற்கு முகம் கொடுக்கவும் மனிதர்களை இலகுவாகக் கையாளவும் இந்தத் தனிமை கற்றுத் தரும். இப்போதெல்லாம் யாருடனும் பெரிதாகக் கதைக்கப் பிடிப்பதில்லை. நறுக்கி விட்ட மாதிரி நாலு வார்த்தை. அதுவும் பலத்த யோசனையின் பின்னர். தாய், மனைவி, உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள் நாம் அபிமானம் வைத்திருந்தவர்கள் என்று எல்லாக் களவானிகளையும் இந்த குறுகிய காலத்திற்குள் எனக்கு தெளிவாக பிரித்தறிவித்த அந்தப் பிரச்சினை பற்றி எண்ணவோட்டங்கள் அசைபோட மறுக்கிறது. எனக்கு இப்போது யாரைப்பற்றியும் கவலை கிடையாது. அப்படியொரு மனநிலை.
ஓர் உயிரைக் கொல்ல அலாதியான துணிவு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துணிவு எனக்கில்லை. ஆனாலும் நடந்து முடிந்திருக்கும் அந்த நல்ல சம்பவம் இறைவன் எனக்களித்த வரம். சத்தியம் எப்போதும் தோற்பதில்லை. நான் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையும் அப்படித்தான். காலதாமதம் ஆனாலும் சத்தியம் தாமதித்து வெல்லும் போது அசத்தியமும் அநியாயமும் அனைத்தையும் அழித்துச் சிதைத்து விடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் கவலை.
நான் நினைக்கிறேன், இப்போது உலகில் மிகத் தெளிவானதும் பிரச்சினைகளே இல்லாததுமான மிக அமைதியான மனோநிலை பெற்ற மிக்க மகிழ்ச்சியான மனிதன் ஒருவன் இருக்கிறான் என்றால் அது நான்தான். இரண்டு மாத கால நெடுந்தவத்தின் பின்னர் எனக்குக் கிடைத்திருக்கும் பரிசு அது. அதை எப்போதுமே இழக்க நான் தயாரில்லை.
அவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எப்படியும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வந்து விடுவார். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ந்து வருவார். இன்று சனிக்கிழமை, கட்டாயம் அவர் வருவார். இத்தனைக்கும் அவர் வந்திருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை இன்னும் அவரைக் காணோம். எனக்கு அவர் எந்த உறவுமில்லை. அவரது பெயரும் தெரியாது. ஊரும் தெரியாது. அதுபோல என்னையும் அவருக்குத் தெரியாது. தடுப்புக் காவலில் இருக்கும் அவரது மகனைப் பார்ப்பதற்காக அவர் வருவார். முறுக்கு மீசை, நரைத்த முடி, கம்பீரமான தோற்றம், வெள்ளைச் சட்டையும், வெள்ளை கலந்த லுங்கியும் அணிந்திருப்பார். தாடியை முழுமையாக சவரம் செய்திருப்பார். அவரின் கம்பீரத்தை இன்னும் உயர்த்திக் காட்டுவது அவரது முறுக்கு மீசை. வயது அறுபத்தைந்து இருக்கும். ஒருகால் துண்டிக்கப்பட்டு இரண்டு கைகளினதும் கக்கத்தில் இடுக்கிக் கொண்ட ஊன்று கோள்களின் துணையுடன் நடக்கின்ற ஒரு முதியவர். அதை ஊன்றுகோள் என்பதைவிட ஊன்றுகால் என்பது சாலப் பொருத்தம், பொருத்தமல்ல பொருத்தமல்ல அது ஊன்றுகால்தான், அதுதான் சரி. அவ்வளவு கச்சிதமாக கால்கள் செய்யும் பணியை அவை அவருக்குச் செய்கின்றன. அவர் மீது எனக்கு அதீத பிரியம். இத்தனை வயது போன காலத்திலும் தனது மகனின் மீது இத்தனை அன்பும் கரிசனையும் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் என்பதால் ஏற்பட்ட பிரியம் தான் அது.
நான் இருக்கும் தடுப்புக் காவல் அறைக்கு அடுத்த அறையில் அவரது மகன் இருந்தான். ஐந்து கிலோ தங்கத்துடன் சம்பந்தப்பட்ட விசாரணைக்காக அவன் தடுப்புக்காவலில் மூன்று மாதமாக இருக்கிறான். அவர் எப்போது மகனைப் பார்க்க வந்தாலும் எனது அறையின் முன்னால் உள்ள தடுப்பில் ஓர் ஊன்று காலை வைப்பார். மற்றையதை கையிலேயே வைத்துக்கொள்வார். பரிவோடு மகனை நலம் விசாரிப்பார். ஒரேயொரு ஆலோசனை சொல்வார்.
'இதன் பிறகு தவறு செய்யாதே' என்பது தான்.
அப்படியொரு நாள் அவர் அவரது மகனுடன் பேசிவிட்டு திரும்பும்போது எனது அறைத் தடுப்பில் இருந்த அவரது ஊன்று கால் கீழே விழப் பார்த்தது. அதை தாவிப் பிடித்து அவர் சிரமப்படாதபடி எடுத்துக் கொடுத்தேன். நன்றியோடு என்னைப் பார்த்து...
'நன்றி மகனே' என்றார்.
எனக்கு இரத்த வேகம் அதிகரித்தது. அது உண்மையான பாசத்தின் விளைவாக அழைக்கப்பட்ட வார்த்தை. இதுவரை யாரும் என்னை அப்படி பாசத்துடன் உண்மையான நேசத்துடன் 'மகனே' என்று அழைத்தது கிடையாது. ஒருவேளை எனது தந்தை ஆயுததாரிகளால் கொல்லப்படாது விட்டிருந்தால் இப்படி உண்மையான பாசத்துடன் என்னை அழைத்திருப்பார் என்று நினைத்தேன். ஒருநாள் கூட எனது தாய் இப்படி உண்மையான பாசத்துடன் 'மகனே' என்று அழைத்திருக்க மாட்டாள். எத்தனை முறை அப்படியொரு உண்மையான பாசத்திற்காக ஏங்கியிருப்பேன். இந்த இருபத்தெட்டு வருடங்களில் எனக்கு புத்தி தெரிந்து ஒருநாளும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இங்கு யாரோ ஒரு மனிதன், அவனுக்கு செய்யப்பட்ட சின்னஞ்சிறியதொரு உதவிக்காக எத்தனை உண்மையான நன்றியுடனும் பாசத்துடனும் 'மகனே' என்று அழைக்கிறானே எனும்போது எனது கண்கள் கலங்கின. எனது குடும்பத்தவர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் வலிந்து வலிந்து எத்தனை உதவிகள் செய்திருப்பேன். ஆனால் செய்த உதவிகள் எல்லாவற்றையும் மறந்து அவன் என்ன செய்து கிழித்துவிட்டான்? என்று இளக்காரமாக கேட்கும் நன்றி கெட்ட ஜென்மங்களுடன் அந்த முதியவரை ஒப்பிட்டுக் கூடப் பார்க்க முடியவில்லை.
அவரைப் பார்த்து ஆவலுடனும் கலங்கிய கண்களுடனும்
'சொல்லுங்கள் பெரியவரே' என்றேன்.
அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார். அதில் பெருத்த நன்றியுணர்வு இருந்தது. அன்பும், கனிவும் இருந்தன.
'எதன் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறாய்' என்றார்.
நான் சிரித்துக்கொண்டே
'தீவிரவாத தடுப்புப் பிரிவின் கீழ் என்றேன்'.
'அப்படியானால் நீ புலியா' என்று கேட்டார்.
மீண்டும் சிரித்தேன்.
'புலி என்று நினைத்து ஒரு பூனையைக் கூட்டில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்' என்றேன்.
பின்னர் கேட்டார்...
'என்ன குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் இங்கு இருக்கிறாய்?'
அவரது தெளிவான வார்த்தைகள் கணீரென்ற குரல் என்னை ஈர்த்தது. நான் தயக்கமேதுமின்றி
'கொலை குற்றத்திற்காக' என்றேன்.
அவர் மீண்டும்
'நீ அதைச் செய்தாயா?' என்றார்.
'நான் நன்மை ஒன்று செய்யப்போய் ஒன்றரை வருடங்களின் பின்னர் அது தீமையாய் முடிந்திருக்கிறது' என்றேன்.
'கவலைப்படாதே நீ இறைவனால் காப்பாற்றப்படுவாய். புத்தர் பெருமான் உனக்கு உதவி செய்வார்'
'பெரியவரே புத்தர் பெருமானை நான் நேசிக்கிறேன். அது உங்களை விட அதிகமாக ஆயினும் அவர் இறைவன் இல்லை என்பதால் அவரை நான் வணங்குவதில்லை. உலகில் தோன்றிய நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர் என்பதால் அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன். முஹம்மது நபியை நேசிப்பது போல' என்றேன்.
'ஆ! அப்படியா முஹம்மது நபியை நீங்கள் இறைவனாக ஏற்றுக்கொள்ளவில்லையா' என்றார்.
'இல்லை பெரியவரே, முஹம்மது ஒரு மனிதர். அவர் கடவுளாக முடியாது. ஆயினும் அவர் எமது நேசத்திற்குரிய மனிதர். அவரை நாங்கள் இறைவனின் தூதராக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் வணங்குவது அல்லாஹ்வை மட்டுமே. அல்லாஹ்வுக்கு இணையாக யாருமில்லை. அவனே இந்த வானம், பூமி எல்லாவற்றையும் படைத்தான். எம்மையும் அவனே படைத்தான். இந்த பூமி தற்காலிகமானது. இது அழிந்து விடும் பின்னர். அனைத்து மனிதர்களும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். உலகில் செய்த நன்மை தீமைகள் பற்றி விசாரிக்கப்படுவார்கள். பின்னர் அவரவர் செயல்களுக்கேற்ப நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். நன்மை செய்தோர் சுவனத்திலும், மறுமை நாளையும் அல்லாஹ்வையும் பொய்ப்படுத்தியோர் நரகத்திலும் நுழைவார்கள். இதுதான் எமது நம்பிக்கை. அதனால் நாங்கள் சிலைகளை வணங்குவதில்லை.'
அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார். அதில் நிறைய அர்த்தங்கள் இருந்தன.
'அப்படியானால் நாங்கள் பாவிகளா?' என்றார்.
'அதனை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும்'.
'உலகம் எப்போது அழியும்' என்று கேட்டார்.
'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது' என்றேன்.
'அப்படியானால் புத்தபெருமானின் நிலை' என்றார்.
'அவர் சிலைகளை வணங்கவுமில்லை, சிலைகளை வணங்கச் சொல்லவுமில்லை. தன்னை வணங்கச் சொல்லவுமில்லை. ஆக அவர் சுவர்க்கத்திற்குரியவாக இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு பெரியவரே'.
'ம்... நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய் மகனே'
'பெரியவரே எனக்கு பௌத்த வேத நூலான திரிப்பிடக தமிழ் மொழியில் இருந்தால் ஒரு பிரதி வேண்டும். கொண்டுவந்து தருவீர்களா' என்றேன்.
'நான் பௌத்தனாக இருந்து கொண்டே திரிப்பிடகவை கண்ணால் பார்த்தது கூட கிடையாது. நீ படிக்க ஆசைப்படுகிறாயே' என்றவர் 'முயற்சிக்கிறேன்' என்பதுபோல தலையசைத்தார். பின் கேட்டார்,
'அப்படியானால் இயேசு பிரான்'?
'எமது நம்பிக்கையின் படி அவரும் ஒரு மனிதர். மக்களுக்கு நேர் வழிகாட்டவந்த ஓர் இறைத் தூதர். அவரை கட்டாயம் நாங்கள் விசுவாசித்தாக வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் கிடையாது' என்றேன்.
'அது என்ன பெரிய புத்தகம்' அருகில் இருந்த புத்தகத்தை நோக்கி விரல் நீட்டியவராக கேட்டார்.
'இது தான் அல்குர்ஆன். இதன்படிதான் நாம் வாழ வேண்டும். இதில் எல்லாவித வழிகாட்டுதலும் உண்டு. மொத்தத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழ இது வழிகாட்டுகிறது' என்றேன்.
'எல்லா முஸ்லிம்களும் இதைப்படிப்பதில்லை தானே'
'அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். ஆனால் கட்டாயம் இதைத் தினமும் படிக்க வேண்டும். அதன்படி வாழ வேண்டும்' என்றேன்.
'முஸ்லிம்களில் அதிகமானவர்கள் இந்த நாட்டில் உண்மையான முஸ்லிம்களாக இல்லையே. அளவையில் நிறுவையில் மோசடி செய்கிறார்கள், பொய் சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். இது இஸ்லாத்திற்கு இழுக்கு இல்லையா?'
'உண்மைதான் அவர்களுக்கு இறைவனின் கருணை கிட்டவில்லை போலும். உண்மையான ஒரு முஸ்லிம் ஒரு நல்ல மனிதனாக இருப்பான். அப்படி இல்லாதவன் பெயரளவில் அவன் முஸ்லிம், அவ்வளவுதான். அது தவிர இதுபோன்ற ஆட்கள் எல்லா சமயத்திலும் சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தின் பெயரால், சமூகத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அது உண்மை தானே பெரியவரே'
அவர் சிரமப்பட்டு கையை நீட்டி எனது தலையைத் தடவினார். எனக்கு மெய் சிலிர்த்தது.
'இந்த பௌத்த நாட்டில் இப்படியொருவரைப் பார்க்க பெருமையாக இருக்கிறது' என்றார்.
'பெரியவரே பெயரளவில் தான் இது பௌத்த நாடு. அநேகர் பௌத்த தர்மத்தின் மீது அக்கறையற்று இருக்கிறார்கள். பௌத்தத்தை சட்டமாக்க வேண்டும். பௌத்த நாடு என்றால் பௌத்த தர்மம் சட்டமாக வேண்டும். அப்படி செய்தால் முதலில் மகிழ்ச்சியடைபவன் நான்தான்'
'ஆஹ் போதும்'
மேலதிகாரியின் குரல் பேரோசையாய் எதிரொலித்தது. அவர் விடைபெற்றார். செல்லும் போது 'அல்லாஹ் உனக்குத் துணை என்றார்'.
அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஊன்று கால்களையும் ஊன்றி எவ்வித சலனமுமில்லாமல் கம்பீரமாக நடந்து சென்றார். அப்போது தான் அதுபற்றிக் கேட்டாக வேண்டும். அவர் காலுக்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருக்க சத்தமிட்ட அதிகாரி வந்தார்.
'புத்த தர்மம் பற்றிய பேச்சு நல்லாத்தான் இருந்தது. புத்தர் சிலைகள் எங்கும் வைக்கப்படுவது பற்றி என்ன நினைக்கிறாய்? என்று தடாலடியாகப் போட்டார்.
'புத்த பெருமானின் போதனைகளை மனதில் ஏற்றி அதைப் பின்பற்றுவதுதான் அவருக்குச் செய்யும் உயர்ந்த மரியாதை, எனக்குக் கூட ஆசைதான். ஒரு புத்தர் பெருமான் சிலையை எனது வீட்டில் வைத்துக்கொள்ள. ஆனால் ஒரு சந்தேகம். அதனால் தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்' என்றேன்.
'என்ன சந்தேகம்?'
'இது உண்மையில் புத்தர் பிரானின் தோற்றமா? அதைக் கொஞ்சம் உறுதிபடுத்திச் சொல்லுங்கள். நானும் ஒரு சிலையை எனது வீட்டில் வைத்துக்கொள்வேன்' என்றேன். அவர் தலையைச் சொறிந்தவராக
'சரி தேடிப்பார்ப்போம்'
'சேர்...'
'என்ன?'
'அப்படியே புத்தர் பெருமானின் சீடர்களான அஞ்ஞாகொண்டஞ்ஞ, வப்ப, வத்திய, மகாநாம, அஸ்ஸஜீ இவர்களின் உருவங்களையும் போதனைகளையும் கொஞ்சம் தேடித் தாருங்கள்'.
நான் சொன்னதும் அவர் மாறிக் அவர் கேட்டார்.
'அவர்களெல்லாம் யார்..?
புத்தர் பெருமானுக்குப் பின்னர் பௌத்தம் வளர்த்தவர்கள்'
'சரி கொஞ்சம் வேலையிருக்கிறது. பிறகு பார்ப்போம்'.
அவர் போய்விட்டார். அதன் பின்னர் அவர் என்னிடம் பௌத்தம் பற்றி மறந்து கூட வாய்திறக்கவில்லை.
இப்படித்தான் நிறைய மனிதர்கள் தாம் பின்பற்றும் கொள்கையில் எந்தத் தெளிவும் இல்லாது வெறும் உணர்வுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது சமயத்தில் தெளிவில்லாத இந்து, கிறிஸ்தவன், பௌத்தன், இஸ்லாமியன் எல்லோர்க்கும் பொருந்தும். சமய நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் இல்லாதவனுக்குக் கூட அவனது நம்பிக்கையில் முழுமையான தெளிவு இருக்காது, ஏதாவது ஒன்றில் இருந்தாக வேண்டும் என்பதற்காக ஏதாவதொன்றில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தான் உலகின் பொது நியதி போல.
எனக்கு பௌத்தத்தைப் பற்றி முழுமையாகப் படிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பது போலவும் தோன்றியது. எதற்கும் அவர் வரட்டும்.
0 0 0
மறுநாள்
நேரமாகிக் கொண்டே போகிறது. இன்னும் அவர் வரவில்லை. இத்தனைக்கெல்லாம் வந்திருக்க வேண்டுமே. எனக்குள் எண்ணவோட்டம், வேறு வேறு திசைகளை நோக்கியெல்லாம் ஓடத் தொடங்கியது. நெஞ்சு பதைபதைத்தது. லேசாக வியர்க்கத் தொடங்கியது. மனசை ஒரு நிலைப்படுத்தினேன். எனது வாழ்வில் இப்படியொரு காத்திருப்பு, மிக அண்மையில் எனது மனைவிக்காக மட்டுமே இருந்தது. இன்று அந்தப் பெரியவருக்காக...
'மகனே' என அவர் அன்போடு அழைத்தது நினைவுகளைச் சுண்டி இழுத்தது. மனிதம் என்பது அன்பு, இனம், நிறம், மொழி, மதம் என்று எல்லாம் கடந்து உண்டுபண்ணும் ஈர்ப்பும், பிடிப்பும், பற்றும் வியக்க வைத்தது.
எத்தனை மனிதர்கள் போலியான அன்பினுள் புதைந்து சட்டென்று நிகழும் நிகழ்வுகளால் பித்துப்பிடித்து புத்தி கலங்கிப் போகிறார்கள். அன்புக்காக ஏங்கும் ஒருவனுக்கே அதன் மகிமை எத்துணை பெரியது என்றும், போலியான அன்பில் இருந்து விடுபட்ட ஒருவனுக்கே அது எத்தனை வலியதும் இதமானதும் அவசியமானதும் என்றும் விளங்கும். அப்படி இருக்கும் போது எதிர்பார்ப்புகளேயற்று ஒருவன் அன்பு செலுத்தும்போது அது எத்தனை கனதியானது என்பதைப் புரிந்துகொள்ளக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்னும் அந்தப் பெரியவரைக் காணவில்லை. இறைவா எந்தக் கெடுதலும் இன்றி அவர் நல்லபடியாக வந்து சேர்ந்து விட வேண்டும். என்ற பிரார்த்தனை உள்ளூர கண்கள் கலங்கிப் போவதைத் தடுக்க முடியாமல்தான் போனது. அவர் பற்றி எதுவும் தெரியாது. அவர் பெயர் கூடத் தெரியாது. அன்பு ஏற்படுத்திய பிணைப்பு வியக்க வைத்தது. என்றுமில்லாதவாறு வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நீண்ட நேரமாக அவதானித்த ஒரு பொலிஸ் அதிகாரி...
'என்ன பலத்த யோசனையும் காத்திருப்பும் போல தெரிகிறது' என்று கேட்டது காதில் விழுந்தது.
லேசாகத் தலையைத் திருப்பி இளநகையோடு
'ஒன்றுமில்லை' என்றேன்.
அவரும் விடுவதாய் இல்லை. அதிகாரி எனது காத்திருப்புக்கு வேறு அர்த்தம் கொண்டுவிட்டார் போல,
'வீட்டிலிருந்து யாரும் வரவில்லை' என்றார்.
'நான் அவர்களுக்கு பிள்ளையே இல்லையாம். பிறகு எப்படி சேர் பார்க்க வருவார்கள். எல்லாம் கலைந்து போன மாயங்கள்' என்றேன்.
'மனைவி வருவாளே, என்ன இரண்டு வாரங்களாகக் அவளையும் காணவில்லை' என்றார்.
அவர் கேள்விகள் என் மீது பரிதாபப்பட்டு கேட்டது போலத் தோன்றியது. ஆறுதலுக்காக கேட்கிறார் என்பதும் புரிந்தது. என் மீது கொஞ்சம் அக்கறை இருக்கிறது அவருக்கு. அத்துடன் என் மனைவியிடம் பேச வேண்டும் என்று உயர் அதிகாரியிடம் அனுமதி எடுத்த பத்து தடவைகளும் அவர்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஒன்று தொடர்பு ஒலி போய்க்கொண்டே இருக்கும். மறு புறத்தில் அவள் பதிலளித்திருக்க மாட்டாள். அல்லது அழைப்பு நெருக்கடியாக இருக்கும். இப்படி ஏதாவது ஒரு தடங்கல். அவரும் சலிக்காமல் எனக்காக ஒன்றுக்குப் பலமுறை அழைப்பார், பிறகு என்னிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வார்.
பின்னர் 'அவள் வந்தால் வரட்டும்' என்று விட்டுவிட்டேன்.
அவர் ஒரு யோசனை தந்தார்.
'நண்பர்கள் யாருக்கும் அறிவித்தால் என்ன?' என்று கேட்டார்.
அதன் பின்னர் அதையும் முயற்சிப்போமே என்று நண்பரொருவரின் தொடர்பு இலக்கத்தைக் கொடுத்தேன்.
எனது அதிர்ஷ்டமோ என்னமோ நண்பரிடம் விஷயத்தைச் சொல்லியாயிற்று என்னைப் பார்க்க வரும்படி, அதன்பின் தான் மனைவி வந்தாள். அன்று அவளது வருகைக்காக காத்திருந்ததுதான். அதன்பிறகு இன்று அந்தப் பெரியவரின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
அந்த அதிகாரியின் கேள்விக்கு பதிலளிக்க மறந்து யோசனையில் இருந்த எனக்கு அவர் மீண்டும் கேட்ட பின்னர் தான் பதிலளிக்க வேண்டும் என்ற ஞாபகமே வந்தது.
'நான் யாரையும் வரச் சொல்லவில்லை சேர்' என்றேன்.
'இப்படி நெருக்கடி நேரத்தில் வரச்சொல்லித்தான் வர வேண்டுமா?' என்றார்.
அதுவும் நியாயமான விசயம்தான், மரண வீட்டுக்கும் சுகயீனத்துக்கும் அழைப்பிதழ் அடித்துக் கொடுத்தா மற்றவர்கள் வருகிறார்கள்? நெருக்கடி நேரம் என்பது அப்படித்தான். அறிந்து ஒருவர் பங்கு கொள்வது, தேடித் தெரிந்து கொள்வது, எப்பாடுபட்டாவது துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வதும், இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்வதும் கொஞ்சம் தெம்பூட்டுவதும், அது உண்மையான நேசமுள்ளவர்களை அப்படிச் செயற்படச் செய்யும். அது இயல்பாக வரவேண்டும் ஊட்டிவருவதல்ல. இந்த அடிப்படையின் பின்னணியில் நானும் அவரை மறுதலிக்க முடியாமல் இருந்தது.
'அவர்களுக்கு வீண் சிரமம் எதற்கு? என நினைத்தேன். அதனால் பெரிதாக அதை அலட்டிக்கவில்லை' என்றதும்,
'புதுமையான மனுஷன்' என்றபடி அவர் தனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.
எனக்கும் அப்பாடா என்றிருந்தது.
நேரம் செல்லச் செல்ல தவிப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
வெள்ளை நிறத்தில் ஏதும் பிம்பம் கண்ணாடி ஜன்னலில் விழுந்து எனது பார்வைக்குப் பட்டுவிட்டால் அது அவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வேன். அது அவரல்லாத பட்சத்தில் வாழ்வில் ஏற்படுகின்ற பெருத்த ஏமாற்றம்போல அது தோன்றியது. ஏன் நான் இப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை, ஏனோ நான் காத்திருக்கிறேன். சிலவேளை அவர் இன்றும் என்னை அன்புடன் 'மகனே' என்று அழைக்கக் கூடும். பரிவுடன் தலையைத் தடவி விடக் கூடும். உண்மையான பாசத்துடன் நலம் விசாரிக்கக் கூடும். அப்படி இருந்த எனது எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போகவில்லை. அவர் வந்தார்.
எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் காத்திருப்போருக்கான இருக்கையில் அதிகாரியின் அனுமதி கிடைக்கும் வரை அமர்ந்திருந்தார். பல்வேறு யோசனைகளில் அவர் மூழ்கியிருந்தார். அவரது ஒவ்வொரு அசைவும் எனக்குப் புதுப்புது அர்த்தங்களையும் சிந்தனைகளையும் தந்தது. அனுமதி கிடைத்ததும் ஒற்றைக் காலில் எழுந்து நின்றார். இரண்டு ஊன்று கால்களையும் எடுத்தார். கக்கத்தில் பதித்தார். எழுந்து, தாங்கும் தடுப்பில் கைகளால் அழுத்திப் பிடித்து, காலைத் தூக்கி வைத்தார், லாவகமாக நடந்தார். சாதாரணமாக நாம் நடப்பதை விட வேகம் அந்நடையில் இருந்தது. சிலவேளை தனது மகனைப் பார்ப்பதற்கான உந்துதலாக இருக்கலாம். என்னைப் பார்த்து,
'ஆ.. மகனே சுகமா' என்றார்.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தலையை மட்டும் அசைத்தேன். அவர் அவருடைய மகனோடு கதைத்தார். கொஞ்ச நேரம் தான் அப்படியே என் பக்கம் திரும்பினார். அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியை கேட்க சற்றுத் தயக்கமாக இருந்தும் கேட்டேன்.
'தந்தையே உங்கள் காலுக்கு என்ன நடந்தது?'
கேட்டு முடிக்கவில்லை, கண்கள் கலங்கி கண்ணீர் வந்து விட்டதை தடுக்க முடியாமற் போனது.
அவரும் அதை அவதானித்து விட்டார் போலும். எனது தலையை தடவியபடி 'இராணுவத்தில் இருந்த போது கண்ணி வெடியில் சிக்கியது. பத்து வருடங்கள் ஆயிற்று. தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றேன்' என்று சிரித்தார்.
'இவ்வளவு சிரமப்பட்டு அடிக்கடி வரத்தான் வேண்டுமா?' என்று கேட்டேன். அவர் இந்நிலையில் இப்படி அலைவது சரியில்லை என்று பட்டது. வியர்த்து களைத்துப் போன அவர். நிச்சயம் நீண்ட தூரம் பிரயாணித்துதான் இங்குவர வேண்டும் என்று தோன்றியதால் அப்படிக் கேட்டேன். அவரும் எனது கேள்வியில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டவராக,
'என்ன செய்வது? எனது மகன் இப்படி இருக்கும் போது என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? அவன் என்னதான் செய்தாலும் எனது மகன். அது ஒருபோதும் அற்றுப்போகாது. தவறு செய்திருக்கிறான். சிலவேளை அது ஒரு நியாயத்திற்காக இருக்கலாம். சட்டத்தின் பார்வையில் அது குற்றமாக இருக்கலாம். அதற்காக நாம் என்ன செய்ய முடியும்?. சரி அப்படித்தான் குற்றம் செய்து விட்டாலும் நான் தானே அவனுக்காக எல்லாம் செய்ய வேண்டும்...'
அவர் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கு பார்வை மங்கிக் கொண்டு போனது. நெஞ்சு அடைத்துக் கொண்டது, மூச்சுக் காற்று அதிக சூடாக வெளியேறியது. உப்புக் கரித்தது, கண்ணீர் வாய்க்குள் சென்றிருக்க வேண்டும். விம்மி அழுது விட்டேன். யார் யாரையோவெல்லாம் நினைத்து அழுதேன்.
மரணித்துப்போன தந்தைக்காக அழுதேன். மரணித்தப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளுக்காகவும் சுற்றத்தாருக்காகவும் நண்பர்களுக்காகவும் அழுதேன்.
எனது மார்க்கம் கால்களில் விழுவதை தடுக்காது மட்டும் இருந்திருந்தால் அந்த மனிதனின் காலில் விழுந்திருப்பேன். அந்த மனிதன் என் பார்வையில் உயர்ந்து தெரிந்தான். அதன் பின் அவர் சொன்ன ஆறுதலும் என் செவிகளில் விழவில்லை. பிரித் பற்றியும் திரிபிடக பற்றியும் அவர் சொன்ன தகவல்களும் என் காதில் விழவில்லை. அந்த உயர்ந்த மனிதனுக்காக கண்ணீரோடு பிரார்த்தித்துக் கொண்டேன்.
எங்கோ தூரத்தில் வானொலியில்
'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான், தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான். புலிகள் அழுவது ஏது? அட பறவைகள் அழ அறியாது. போர்க் களம் நீ புகும் போது, முள் தைப்பதை கால் அறியாது, மகனே! காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது...'
எனது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாக தூரத்தில் எனக்காகக் காத்திருப்பதாகப் பட்டது.
அதுவரை மௌனமே எல்லாவற்றுக்குமான எனது பதில்.
- முஸ்டீன்
உங்கள் சுய கற்பனையில் உருவாகிய சிறுகதைகள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்... அவை தரங்கண்டு இங்கு பிரசுரிக்கப்படும். உங்களின் சொந்த சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி..admin@udagam.com
