புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
தூக்குத் தண்டனை ரத்தான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய 3 பேரையும்
விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் மரணத்தண்டனை பெற்ற
முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய 3 பேரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும்
என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த
சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தூக்குத் தண்டனையை ரத்து செய்து கடந்த 18ஆம்
தேதி தீர்ப்பளித்தது. மேலும், இவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில்
கொண்டு விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்யலாம்
என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் முருகன், சாந்தன்,
பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும், 3
நாட்களுக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் நாங்களே முடிவு
எடுப்போம் என்றும் ஜெயலலிதா கெடு விதித்தார்.
இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கென பிரதமர்
தலைமையில் மத்திய உள்துறை அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர்கள் ஆகியோர்
டெல்லியில் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். இதில் ராஜீவ் கொலையாளிகள் 3 பேரை
தப்பிக்க விடக்கூடாது என்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு முழு
அளவில் இறங்கியுள்ளது.
மேலும், இது குறித்து பிரதமர்
மன்மோகன்சிங் தெரிவிக்கையில், "ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்
விடுதலை செய்வது சட்டப்படி ஏற்கத் தக்கது அல்ல, முருகன் உட்பட 7 பேரை
விடுதலை செய்வது குறித்த நடவடிக்கையை தமிழக அரசு தொடரக் கூடாது" என்று
தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தண்டனை குறைக்கப்பட்ட
மூவரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
மத்திய அரசு இன்று அவசரமாக மனு தாக்கல் செய்தது.
இது தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை
வழக்கறிஞர் மோகன் பராசரன் தாக்கல் செய்த மனுவில், வழக்கை மத்திய
புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில் மாநில அரசு விடுவிக்க முடியுமா?
என்று விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்
கொண்ட நிலையில், நண்பகல் 12.45 மணிக்கு விவாதம் நடைபெற்றது. அப்போது,
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், 3 நாட்களில்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு
இடைக்கால தடை விதித்தது.
