தமிழக அரசால் வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாக்களுக்கு 18 ஆண்டுகளாகியும் இதுநாள்வரை இடத்தை அளந்து கொடுக்காத அவலம் புதுக்கோட்டையில் தொடர்வதாகவும், அரசுக்கும், முதல்வருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும் தெரிவித்தார் சிதம்பரம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளக்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் குடிமனைப் பட்டா இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். சில இடங்களில் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு குடிமனைப் பட்டா வழங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஆனால், புதுக்கோட்டை நரிமேடு பகுதியில்அதற்கு அவசியமே இல்லாமல் அரசுப் புறம்போக்கில் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான இடத்தை அளந்து கொடுக்க எது தடையாக இருக்கிறது என்பதை அதிகாரிககள் விளக்க வேண்டும். அதிகாரிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் அரசுக்கும், முதல்வருக்கும் அவப்பெயரைக ஏற்படுத்திவிடும் என்பதை உணர வேண்டும். இப்பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் ல் கேள்வி எழுப்புவதோடு, முதல்வரிடமும், வருவாய்த்துறை அமைச்சரிடமும் எடுத்துரைத்து உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இந்தப் பிரச்சினைக்குப் பின்னணிக்காரணம்:
கடந்த 2.3.1996 அன்று அப்போதைய அதிமுக அரசால் வீடில்லாத ஏழைகள் 669 பேருக்கு புதுக்கோட்டை நரிமேடு (சர்வே எண்:29-11) பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்காமல் தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
கடந்த 16.12.2008 -ல் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, பட்டாதாரர்களை மறு ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு அதிகாரிகளால் உத்தரவாதமளிக்கப்பட்டது. அதன்படி ஆய்வு செய்யப்பட்டதில் 669 பேரில்40 போ; பட்டா பெறுவதற்குத் தகுதியற்றவா; எனவும் மீதமுள்ள 629 போpல் முதல் கட்டமாக 50 பேருக்கு 31.12.2008-க்குள் இடத்தை அளந்து கொடுப்பது எனவும், மீதமுள்ளவர்களுக்கும் அடுத்த கட்டமாக அளந்து கொடுப்பது எனவும் அதிகாரிகள் உத்தரவாதமளித்தனர்.
ஆனாலும், உறுதியளித்தபடி அதிகாரிகள் துரும்பைக்கூட அசைக்கவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர், வருவாய்த்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை. இந்நிலையில் பொறுமையிழந்த பட்டாதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவின் சர்வே எண்ணிற்கு உட்பட்ட இடத்தில் கொட்டகை போட்டு குடியேறும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இச்சூழலில் வௌ்ளிக்கிழமை புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ- கே.பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, தங்களுக்கு பட்டா வழங்கபட்ட இடம் கிராவல் மண் அள்ளுவதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் ஒப்பந்தகாரர்களுடன் கூட்டுச்சோ்ந்து அதை அபகரிக்கும் நோக்கில் அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வதாக அவரிடம் பட்டாதாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதில், மாவட்டச் செயலர் எம்.சின்னத்துரை, செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராமலிங்கம், வி.துரைச்சந்திரன், நகரச் செயலர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலர் எம்.ராமசாமி, மாதர்சங்க மாவட்டச் செயலர் டி.சலோமி, விவசாயிகள் சங்க நிர்வாகி சா.தோ.அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
