மகசின் சிறைச்சாலையில் மர்மமான முறை
யில் இறந்த பிரித்தானிய பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் தொடர்பில்
ஓர் முழுமையான விசாரணையை பிரித்தானியா கோரவேண்டுமென
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்
பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் காலை மகசீன் சிறைச்சாலையில் பிரித்தானிய பிரஜையான
விஸ்வலிங்கம் கோபிதாஸ் (வயது 43) என்பவர் மர்மமான முறையில் இறந்த
நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானிய பிரஜையான 43 வயதையுடைய விஸ்வலிங்கம் கோபிதாஸ் கடந்த
2007ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது விடுதலைப் புலிகளுடன்
தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு
நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2013ஆம்
ஆண்டு இவரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவருக்கு 05
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத் தண்டனைக் காலத்தை லண்டன்
சிறையில். அனுபவிக்க அனுமதிக்குமாறு கோபிதாஸ் வேண்டுகோள்
விடுத்தார். இவரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவ்வாறு செய்யத்
தயார் என பிரித்தானியா அறிவித்தபோதும் இலங்கை நீதியமைச்சு அனுமதி
வழங்கவில்லை. இதனால் இவர் மகசீன் சிறையிலேயோ தொடர்ந்தும் தடுத்து
வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மகசீன் சிறைச்சாலையின் சீ பிரிவிலுள்ள
குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்க காணப்பட்டுள்ளார்.
எனவே இம் மரணம் தொடர்பில் முழுமையான நீதியான விசாரணை வேண்டுமென
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதோடு இம் மரணம் தொடர்பில் நீதியான
விசாரணையைப் பிரித்தானியாவும் கோர வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கின்றது. ஏனெனில் இலங்கை சிறைகளில் கைதிகள் கொல்லப்படுவதோ அல்லது
இவ்வாறு மரணமடைவதோ இதுதான் முதற்தடவையல்ல என்பதும் உலகறிந்த உண்மை.
எனவே, இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

Post a Comment