GuidePedia

0
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள  பிரபல நகை மாளிகை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுவல் லங்கா  நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் இடம்பெற்றது.
 
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தலைக்கவசம் மற்றும் ஜக்கட் அணிந்த இரண்டு பேர் கடையில் நுழைந்து வர்த்தக நிலையத்தின்  உரிமையாளரது தலையில் ஒருவர் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி பணத்தை கேட்டுள்ளார். 
 
மற்றைய நபர் பணத்தை எடுத்து பையொன்றில் போட்டுள்ளார். அதன் பின்னர் இரண்டு நபர்களும் அங்கிருந்து வெளியேறி கடைக்கு சற்று தூரத்தில் தயாராக  இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
 
இது தொடர்பாக கடை ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில், 
 
தலைக்கவசம் மற்றும் ஜக்கட் அணிந்த இரண்டு பேர் கடை முதலாளியிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கடையில் இருந்த டொலர் மற்றும் உள்நாட்டு நாணயங்கள் அடங்கலாக ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிட்டு சென்றனர். அவர்கள்  முழுமையாக மூடப்பட்ட தலைக்கவசம் அணிந்திருந்ததால் முகத்தை பார்க்க முடியவில்லை என்றார்.
 
ஐந்து நிமிட இடைவெளியில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்ற போது நாணய மாற்று நிலையத்திற்கு வந்திருந்த  வாடிக்கையாளர்கள் இருவர் தெரிவித்தனர். 
 
இதன் போது கடையில் 15 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரியவருகிறது.
இதேவேளை, இச்சம்பவத்திற்கு நால்வர் கொண்ட குழுவினர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சஜித் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top