GuidePedia

0
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தினை வலுப்படுத்தும் செயற்பாடுகள் நாட்டில் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நவநீதம் பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்படுகின்றமைக்கு கூட்டமைப்பினரும் ரவூப் ஹக்கீமுமே பிரதான காரணமாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபைத் தலைவர் மொஹமட் முசம்மில் தெரிவித்தார். 
 
அரசியல் சுய நலத்திற்காக நாட்டை காட்டிக் கொடுக்கக்கூடாது. இந்த அரசாங்கத்தின் ஆட்சி மாறாத  வரைக்கும் இலங்கை பாதுகாப்பாகவே இருக்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
 
தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். 
 
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
சர்வதேச விசாரணையினை இலங்கை மீது மேற்கொள்வதற்கான ஜெனிவா தீர்மானத்தினை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இலங்கையினை காட்டிக் கொடுத்து அதன் மூலம் அரசாங்கமொன்றினை அமைக்கவே திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 
 
குறிப்பாக இன்று வடக்கில் காணாமல் போனோரின் உறவுகள் என்ற பெயரில் பொய் சாட்சியங்களை வழங்கவும் சர்வதேசத்திடம் பொய்யான அறிக்கையினை சமர்ப்பிக்கவுமே பிரிவினை வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இயங்கி வருகின்றனர்.
 
ஜெனிவா தீர்மானம் தொடர்பில் சர்வதேச அளவில் தலையீடுகள் ஏற்படுவதற்கும் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தமும் ரவூப் ஹக்கீமின் பொய்யான அறிக்கைகளுமே காரணம். இன்று சம்பந்தன் ஹக்கீம் ஆகியோர் கூட்டாக ஒன்றிணைந்து மக்களை ஏமாற்றுவது மட்டுமன்றி நாட்டையும் சீரழிக்கவே முயற்சிக்கின்றனர். 
 
சர்வதேச தலையீடுகளை இலங்கை மீது ஏற்படுத்தி இலங்கை மீது பொருளாதாரத்தடையினை ஏற்படுத்தவே அனைத்து தீவிரவாத சக்திகளும் முயற்சிக்கின்றன.
 
இன்று அரசியல் பிரச்சினைகளையும் தனிப்பட்ட விரோதங்களையும் மனதில் வைத்துக் கொண்டு காட்டிக் கொடுக்கக்கூடாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினை கவிழ்த்து எதிர்க்கட்சிகளின் அரசாங்கம் உருவாக்கப்பட்டால் சர்வதேச தலையீடுகள் நேரடியாகவே ஏற்படுத்தப்படும். இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையிலேயே நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க முடியும். மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

 
Top