அநுராதபுரம் தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து கடந்த 27ஆம் திகதி திருட்டிச்செல்லப்பட்ட மேசை கதிரைகளில் ஒரு பகுதியை றம்பாவ பகுதியிலுள்ள தனியார் வகுப்பொன்றிலிருந்து கண்டுபிடித்துள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க தலைமையிலான பொலிஸ் குழு நடாத்திய தீவிர விசாரணைகளின் பின் 25 கதிரைகளும் 25 மேசைகளும் ஒரு ஆசிரியர் மேசையும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனியார் வகுப்பொன்றிலிருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் போது இந்த தனியார் வகுப்பின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் மற்றொருவரும் இணைந்து இராணுவ ட்ரக் வண்டியொன்றிலேயே இத்தளபாடங்கள் ஏற்றி செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாடசாலையிலிருந்த 44 பெரிய கதிரைகளும் 34 மேசைகளும் 07 கதிரைகளும் ஒரு ஆசிரியர் மேசையும் இனந்தெரியாத குழுவொன்றினால் திருடிச் செல்லப்பட்டிருப்பதாக பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இவ்வாறு திருடப்பட்ட மேசைகளுக்கும் கதிரைகளுக்கும் நிறபூச்சு பூசப்பட்டுள்ளது. இவற்றின் உட்பகுதியில் பாடசாலையின் பெயரின் சுருக்க எழுத்துக்களை அழிக்கத்தவறியமையால் இவற்றை இலகுவாக இனங்காண முடிந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment