GuidePedia

0
உலகளாவிய ரீதியில் சிறுவர் மீதான நெருக்கீடுகள் அதிகரித்து வருகின்றன. நாளாந்தம் பல சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதோடு அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒழுக்கம் நிறைந்த சிறுவர் சமூகத்தை உருவாக்குவதில் பல சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக உலக நாடுகள் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் புத்திஜீவிகளால் வலியுத்தப்பட்டுள்ளது.
 
சிறுவர் உலகம் என்பது மகிழ்ச்சிக்குரியது. எனினும் அந்த சிறுவர் உலகத்தின் மகிழ்ச்சியை உரியவாறு அனுபவிக்க முடியாது பல சிறுவர்கள் அல்லல்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. யுத்தம், துஷ்பிரயோகங்கள், இயற்கை அனர்த்தங்கள், வறுமை உள்ளிட்ட பல காரணிகள் சிறுவர்களின் மகிழ்ச்சியை பறித்தெடுத்துள்ளன.
 
சிரியாவில் கடந்த மூன்று வருட காலமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் குறைந்தது பத்தாயிரம் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. சிரியாவில் அரசாங்க தடுப்புக் காவலில் சிறுவர்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டும் எதிர்குழுவினருடனான மோதலில் ஈடுபடுத்தப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் மனித கவசங்களாக பயன்படுத்தப்பட்டும் வருவதாக ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். சிரியாவில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அரசாங்க தடுப்பு நிலையங்களில் வயது வந்தவர்களுடன் 11 வயது வரையான சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கின்றது.
 
சிறுவர்கள் இதன்போது உலோகக் கம்பிகள், சாட்டைகள், மரக்கட்டைகள், உலோகக் கோள்கள் என்பவற்றால் அடிக்கப்பட்டும் பிறப்புறுப்புகள் உள்ளடங்களான உடல் பகுதிகளில் மின் அதிர்ச்சி பிரயோகிக்கப்பட்டும் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இச்சிறுவர்களுக்கு சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும் உள்ளது. அரசாங்க தடுப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்கள் சிரிய புலனாய்வு சேவைகள் மற்றும் சிரிய ஆயுதப்படை என்பவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.
 
ஆசியாவில் சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் வர்த்தகத்துக்கு பலியாகும் நிலை உருவாகி வருவதாக2010 ஆம் ஆண்டில் வெளியான தகவல் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. தற்போதும் இவ்வபாய நிலை நீங்கி விடவில்லை. மாலியில் ஆயுதக்குழுக்கள் சிறுவர்களை ஆட்சேர்ப்பதுடன் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. மாலியின் சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் 2012இல் இருந்து ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் ரீதியாக வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது விமர்சனத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டிருப்பதாக அண்மையில் பி.பி.சி செய்திகள் வலியுறுத்தி இருந்தன. ஒரு பாலுறவு கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விடயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகள் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. குற்றமிழைத்த பாதிரியார்கள் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணக் கோவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. சிறுவர் உரிமை பாதுகாப்பு மையம் இழைக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் வத்திக்கானால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஐ.நா. குழு வத்திக்கான் அதிகாரிகளை வெளிப்படையான விசாரணை ஒன்றுக்கும் உட்படுத்தி இருந்தமை நினைவிருக்கலாம்.
 
கல்வி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் உலகில் பல சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கதாகும். வறுமை, நோய், பாடசாலைக்குள்ள தூரம், பெற்றோரின் பாமரத்தன்மை போன்ற பல நிலைமைகள் சிறுவர்களின் கல்வியை பாதித்துள்ளன. வீதியோரச் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ள அதேவேளை விசேட தேவை கொண்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் உரிய அபிவிருத்தியினை எட்டவில்லை. 2015ஆம் ஆண்டிற்குள் சிறுவர்கள் அனைவருக்குமான கல்வியை அடைய உலகத்தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். எனினும் இது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதில் சந்தேகங்கள் மேலெழுந்து வருகின்றது.
 
அனைத்து சிறுவர்களுக்கும் ஆரம்ப பாடசாலைகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்க இன்னும் 72 இற்கு மேற்பட்ட வருடங்கள் காத்திருக்க வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு அறிக்கையிட்டுள்ளது. உலகில் 57 மில்லியன் பேர் பாடசாலைக் கல்வியை பெற முடியாத நிலையில் உள்ளனர். இதற்கேற்ப ஆபிரிக்க சிறுமிகளும் வறியவர்களும் ஆரம்பக் கல்வியை பெற்றுக் கொள்வதை சாத்தியமாக்க 2086 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியுள்ளது. அனைவருக்குமான கல்வியில் உள்ள குறைபாடு வறிய நாடுகளில் உள்ள பல பாடசாலைகளின் மோசமான தராதரம் என்பன கற்றல் நெருக்கடிகளுக்கு வித்திட்டுள்ளது.
 
நைஜீரியா நாட்டில் அதிகமான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாதுள்ளனர். பாகிஸ்தான், எதியோப்பியா, இந்தியா, பிலிப்பைன்ஸ், புர்ஜினொ, பஸோ, கென்யா, நைஜர், யேமன், மாலி ஆகிய நாடுகளிலும் கணிசமான சிறுவர் தொகையினர் பாடசாலைக்கு செல்லாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் கல்விக்காக செலவிடப்படும் தொகையில் அரைப்பங்கு தொகை தரமற்ற கல்வி காரணமாக வீணடிக்கப்படுகின்றது. இவ்வாறு வருடமொன்றுக்கு வீணடிக்கப்படும் தொகை 129 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
 
சட்ட விரோதமாக ஏனைய நாடுகளுக்கு செல்பவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இதனடிப்படையில் சட்டவிரோதமாக வருபவர்களை பசுபிக் பிராந்திய தீவுகளில் உள்ள தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி தண்டிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. இத்தகைய சிறுவர்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
 
இந்நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள புத்தி ஜீவிகள் சிறுவர்களது பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கடப்பாடுகளை அவுஸ்திரேலியா மீறியுள்ளதா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் பரிசீலனை செய்யவுள்ளதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையகத் தலைவர் இல்லியன் திரிக்ஸ் தெரிவித்திருக்கின்றார். சிறுவர்களை பெருமளவு தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் கடந்த காலங்களிலும் அவுஸ்திரேலியா கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தமையும் தெரிந்த விடயமாகும்.
 
உலகில் 121 மில்லியன் பேர் உள நெருக்கீட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபன அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வருடமொன்றுக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி இருக்கின்றது. 2030ஆம் ஆண்டளவில் உலகில் ஏற்படும் மரணங்களில் உள நெருக்கீடு காரணமாக ஏற்படும் மரணங்கள் இரண்டாம் இடத்தைப்பிடிக்கும் என்றும் செய்திகள் வலியுறுத்துகின்றன. இந்த வகையில உலகில் பல சிறுவர்களும் தற்போது உள நெருக்கீடுகளுக்கு உள்ளாகியுள்ளமை புதிய விடயமல்ல. இத்தகைய சிறுவர்களும் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
 
உலகின் ஒரு மில்லியன் சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சிறுவர் நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் மதச்சடங்காக பிறப்புறுப்பு சிதைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
 
சிறுவர்கள் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் சக மாணவர்களை தற்கொலை குண்டுதாரியிடம் இருந்து காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்த சிறுவன் ஒருவனின் துணிகரச் செயல் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. சிறுவனின் உயிர்த்தியாகம் நெஞ்சை கசக்கிப் பிளிகின்றது. பாகிஸ்தான் வட மேற்கு மாவட்டமான ஹன்கு என்னுமிடத்தை சேர்ந்த எயிட்ஸாஸ் ஹசன் என்ற மேற்படி மாணவர் தற்கொலை மேலங்கியை அணிந்தவாறு நபர் ஒருவர் பாடசாலை வாயிலை நோக்கி வருவதைக் கண்டுள்ளார். அங்கிருந்த அனைவரும் செய்வதறியாது நின்றிருக்க14 வயது நிரம்பிய ஹசன் துணிச்சலுடன் குண்டுதாரியை எதிர்கொண்டு அவரை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான். இதன் போது தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க வைக்க படுகாயமடைந்த ஹசன் உயிரிழந்துள்ளான். சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பாடசாலையில் இரண்டாயிரம் மாணவர்களும் ஆசிரியர்கள் பலரும் இருந்துள்ளனர். ஹசன் குண்டுதாரியை தடுத்து நிறுத்தாவிட்டால் பெருமளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

 
Top