முறையான ஆலோசனைகளை பெற்று தீர்மானம் மேற்கொள்ளாமையால் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திராவிட முன்னேற்றக்கழ தலைவர் மு.கருணாநிதி சாடியுள்ளார்.
மு. கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரகளின் விடுதலை குறித்து சிரேஷ்ட வழக்கறிஞர்களிடம் எந்தவிதமான ஆலோசனைகளும் பெறப்படாத நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் தமிழக அரசு பெருமை தேடிக்கொள்ள முயற்சித்துள்ளதாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில அமைச்சரவையின் முடிவு குறித்து மூன்று நாட்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சு தீர்மானிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்திருந்தார்.
தமிழக முதலமைச்சரின் இந்த தீர்மானம் திரிசங்கு சுவர்க்கத்தில் மாட்டிக்கொண்டு விழிப்பதைப் போன்று காணப்படுவதாக திராவிட முன்னேற்றக்கழக தலைவர் தனது அறிக்கையில் ஏளனம் செய்துள்ளார்.
இந்த அரசியல் அவசர ஆதாயம் காரணமாக, உச்ச நீதிமனற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே விடுதலையாகி இருக்க வேண்டியவர்கள் இன்னும் வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற தேர்தலை காரணம்காட்டி, அதனை நீதிமன்றத்திற்கு அறிவித்து வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கான புதிய வழிமுறைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தேடுவதாகவும் திராவிட முன்னேற்றக்கழ தலைவர் மு. கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Post a Comment