(எம்.எப்.எம்.பஸீர்)
பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த
யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய
பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டிய, பிட்டிகலை, பொகுனுவலகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி
ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.
தினேஷா திலக் ஷி என்ற யுவதியே தனது வீட்டின் அறை ஒன்றில் சேலை ஒன்றினை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
தினேஷா திலக் ஷி என்ற குறித்த யுவதி எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தேயிலை
தொலிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்துவந்துள்ளார். இதனிடையே பேஸ்புக் மூலமாக
அவருக்கு ஜா எல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தினேஷா சுமார் ஆறு மாத
காலமாக காதல் தொடர்பொன்றை வளர்த்து வந்துள்ளார்.
தனது பேஸ்புக்கில் சுயவிபர புகைப்படத்துக்கு பதிலாக மொடல் அழகி ஒருவரின்
புகைப்படத்தை இட்டே குறித்த யுவதி இந்த காதல் தொடர்பை வளர்த்து
வந்துள்ளார். இந் நிலையில் நேற்று குறித்த யுவதியின் வீட்டுக்கு காதல்
தொடர்பை பேணிய இளைஞரும் அவரது குடும்பத்தினரும் பெண்கேட்டு வருகை
தந்துள்ளதுடன் புகைப்படத்தில் உள்ள யுவதியின் புகைப்படம் போலியானது என்பதை
உணர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த யுவதி
இன்று பகல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காலி , லபுதுவ ஸ்ரீ தம்ம வித்தியாலயத்தில் கல்வி நடவடிக்கைகளை
மேற்கொண்டிருந்த குறித்த யுவதி மூவர் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவர்
ஆவார். இந் நிலையில் இரண்டாவது தடவையாக இம்முறை அவர் கல்விப் பொதுத் தராதர
உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்ததாகவும் அறிய முடிகிறது.
தாய் வேலைக்கு சென்றிருந்த போது, தனது ஏனைய இரு சகோர்தரிகளும் வீட்டில்
இல்லாத போதே குறித்த யுவதி இந்த தற்கொலையை செய்துகொன்டுள்ளார். சம்பவம்
தொடர்பான விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில்
சடலமானது தர்போது பிரேத பரிசோதனைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
