பஸ்ஸை வழிமறித்து மாணவர்களை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான 7 மாணவர்கள்
மெதகமை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை தலைமறைவாகியுள்ள உறுப்பினரை தேடும் பணியில் மெதகமை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி தெரிய வருவதாவது,
மெதகமை யக்குண்ணாவ மகா வித்தியாலயத்திற்கும், பகினிகாவெல முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குமிடையே கடந்த செவ்வாய்க்கிழமை போட்டியொன்று இடம்பெற்றது. இதன்போது கிரிக்கட் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இம்முறுகல் நிலையினை இரு வித்தியாலய அதிபர்கள் தலையிட்டு நிவர்த்தி செய்தனர்.
இதனையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலைக்கு காரணமாக இருந்த நான்கு மாணவர்களும், மூன்று மாணவிகளும் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கும்பலொன்று குறித்த பஸ்ஸை வழிமறித்து, மாணவ, மாணவிகளை வெளியில் இழுத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இத்தாக்குதல்களை மேற்கொண்ட கும்பலை வழிநடத்திக் கொண்டிருந்தவர், முன்னாள் மெதகமை பிரதேச சபை உறுப்பினரென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு சூத்திரதாரியான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாகவும், அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் எட்டுப்பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment