சிதம்பரம் அருகே வனத்துறை பறக்கும்படையினர் கொக்கு வேட்டையாடிவரை பிடித்து வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.
வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க விழுப்புரம் கோட்ட வனத்துறை பறக்கும்படையைச் சேர்ந்த உதவி வன பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், வன காப்பாளர்கள் சரவணன், பெரியசாமி, பாலமுருகன் ஆகியோர் சிதம்பரம், பிச்சாவரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாறுவேடத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது பிச்சாவரம் அருகே மணவெளி எனுமிடத்தில் 3 கொக்குகளை வேட்டையாடி பிடித்த பக்கிரியை கைது செய்து சிதம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பக்கிரி மீது சிதம்பரம் வனத்துறையினர் வழக்குப் பதிந்து கொக்கு ஒன்றுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் கொக்குகளை வனத்துறையினர் பாதுகாப்பாக பிச்சாவரம் காட்டில் கொண்டு விட்டனர்
