GuidePedia

கிருஷ்ணகிரி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட பாமக திட்டமிட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் வாக்களித்தோம். ஏனென்றால் ஹைதராபாத் நிஜாம் காலத்தில் தெலுங்கானாவை பாகிஸ்தானுடன் இணைக்க அவர் திட்டமிட்டார். அப்போது நேரு, பட்டேல் ஆகியோர் இந்திய துணை ராணுவத்தை அனுப்பி வைத்து நிபந்தனையுடன் இந்திய யூனியனுடன் தெலுங்கானாவை இணைத்தனர். விருப்பம் உள்ளவரை இணைந்திருக்கலாம் என்றும், விரும்பாத போது பிரிந்து கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை. அதனால் நாங்கள் தெலுங்கானா மசோதாவை வரவேற்றோம். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மக்கள் பகைமையை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். சில கட்சிகள் தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி சாதி, மத வெறியை தேர்தல் பிரச்சார உத்தியாக கையாண்டு வருகிறது. தமிழகத்தில் பாமக சாதி வெறியையும், தேசிய அளவில் பாஜக முஸ்லிம் வெறுப்பையும் கையில் எடுத்துள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட பாமக திட்டமிட்டுள்ளது. அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தமிழக அரசு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திமுக கூட்டணி மிகவும் பலமான கூட்டணி ஆகும். தேமுதிக பாஜக கூட்டணிக்கு செல்லாது என்று நம்புகிறேன். காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு இருப்பினும் தமிழக மற்றும் தேசிய அளவில் சாதி, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணிக்கு வந்தால் அதை வரவேற்போம் என்றார்.
 
Top