GuidePedia

0


அதிமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கான தொகுதிகள் ஒதுக்காமல் 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது இடதுசாரிகளின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கல்ல என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா பாண்டியன்.

இது குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த தா பாண்டியன், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் அதிமுகவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டின்போது இப்படியானதொரு நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால் ஆரம்பகட்ட சிக்களையும் தாண்டி சட்டமன்றத் தேர்தலின்போது இறுதியில் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனைகள் சுமுகமாக பேசித் தீர்க்கப்பட்டதைப் போலவே, இப்போதும் அதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு சுமுகமாக முடிவுக்கு வரும் என்றும், தமிழ்நாட்டில் இடதுசாரிகள் அடங்கிய அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெரும் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏறக்குறைய தா பாண்டியன் கூறிய இதேபோன்ற நிலைப்பாட்டையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே வரதராஜன் பிபிசி தமிழோசையிடம் வெளியிட்டார். அதிமுகவுடனான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருவதாகவும் தங்களுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இரு கட்சித் தலைமைகளாலும் ஏற்றுக்கோள்ளப்பட்ட பிறகு அந்த தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று தமக்கு முழுநம்பிக்கை இருப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Post a Comment

 
Top