14வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 17 வயதுடைய இளைஞனும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, விநாயகபுரம் வீரையடியைச் சேர்ந்த
14வயதுடைய சிறுமியொருவருக்கும் பெரியகல்லாறு உதயபுரத்தைச் சேர்ந்த 17
வயதுடைய இளைஞர் ஒருவருக்குமிடையே காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்
குறித்த இருவரும் குடும்பத்தவர்களுக்கு தெரியாது தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில்
இவ்விடயம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை பதிவு செய்த
பொலிசார் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள பொலிஸ்
நிலையங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு நேற்று (20) கிடைத்த
இரகசியத்தகவலொன்றையடுத்து களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் தேடுதல் நடத்திய
பொலிசார் குறித்த சிறுமியையும் காதலன் எனக்கூறப்படும் இளைஞனையும் இளைஞனின்
தாயையும் கைது செய்துள்ளனர்.
சிறுமி வைத்தியப்பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இளைஞனும் அவரது தாயும் நீதிமன்றத்தில்
இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment