17 அங்குலம் நீளமான வாளை விழுங்கி உலகின் 'மிக இளவயது வாள் விழுங்கும் பெண்' என்ற பெருமையை இச்சிறுமி பெற்றுள்ளார். 15 வயதான ஹேலி ஹோல் என்ற சிறுமியே இந்த ஆபத்தான சாதனை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வதேச வாள் விழுங்குபவர்கள் அமைப்பானது ஹேலி ஹோலின் சாதனையை அங்கீகரித்துள்ளது. இவ்வமைப்பினால் இளவயதில் வாள் விழுங்கிய பெண்ணாக இதுவரையில் 21 வயது மங்கையே அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் அதிர்ஷ்டசாலி. எனது பெற்றோர் எனக்கு பெரும் உதவியாக இருந்தார்கள். ஆரம்பத்தில் எனது தாய் என்னை நினைத்து பயந்தார். ஆனால் நான் கவனமாக இருப்பதை உணர்ந்துகொண்டார்' என தனது சாதனை குறித்து மகிழ்சியுடன் கூறியுள்ளார் ஹேலி ஹோல்.
வாள் விழுங்குவதற்கு முன் அதற்கா பயிற்சிகளையும் மனித உடலமைப்பு வாள் விழுங்குவதற்கு தகவுடையது என்பதையும் அறிந்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாள் விழுங்குவது மட்டுமன்றி கராத்தே தற்காப்பு கலையில் கறுப்பு பட்டியை வென்றுள்ள ஹேலி துப்பாக்கி சுடுதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் என பல சாகஸ விளையாட்டுகளில் ஆர்வமிக்கவர்.
ஜோர்ஜியாவில் பெரி கல்லூரியில் கடந்த வாரம் தனது முதலாவது பொது நிகழ்ச்சியினை மேற்கொண்டார் ஹேலி. அத்துடன் ஹேலியின் சாதனையை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்யவும் ஹேலியின் குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்
