புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 150
கடைகள், 2 லாரிகள், 11 வீடுகள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் சுமார்
ரூ.1 கோடிக்கும் மேலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் உள்ளது சந்தைப்பேட்டை. இங்கு மூங்கில் கடை, மரக்கடை, பழைய இரும்புக்கடை மற்றும் வேறு சில கடைகளும், அருகில் வீடுகளும் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கடைகள் மிகவும் நெருக்கமாகவும், குறுகலான பாதையையும் கொண்டது.
நேற்று மதியம் 2 மணி அளவில் அங்குள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் காரணமாக மளமளவென பரவிய தீ அருகில் அடுத்தடுத்துள்ள கடைகளுக்கும் வேகமாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை தீயணைப்பு கோட்ட அலுவலர் சையது முகமது ஷா உத்தரவின் பேரில் புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சாந்தார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
150 கடைகள்–வீடுகள் எரிந்து நாசம்
ஆனால் மரம் மற்றும் மூங்கில் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட், ஆலங்குடி, பொன்னமராவதி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 14 தீயணைப்பு வண்டிகளும், மேலும் நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் வண்டிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அங்குள்ள சுமார் 150 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் அந்த பகுதியில் இருந்த இரண்டு லாரிகளும் தீயில் எரிந்து நாசமாகின. அருகில் இருந்த 11 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தபோதும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பார்வையிட்டார்
தீ விபத்து குறித்த தகவல் அறிந்த அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் மனோகரன், கார்த்திக் தொண்டைமான் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர்(பொறுப்பு) அப்துல் ரகுமான், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு தீப்பிடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அந்த சுற்று வட்டார பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Post a Comment