GuidePedia

0
தலிபான் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலொன்றில் 19 ஆப்கான் போர் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாய் இலங்கைக்கான தனது விஜயத்தை ஒத்திப்போட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
ஜனாதிபதி கர்ஸாயின் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் துன்பகரமான சம்பவத்தினால் ஜனாதிபதி கர்ஸாய் மிகவும் கவலையடைந்திருப்பதாலேயே அவர் இலங்கைக்கான தனது நேற்றைய விஜயத்தை ஒத்திப் போட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 
 
தலிபான் அல் கொய்தா மற்றும் ஏனைய போராளிக் குழுக்களின் நீண்ட கால கோட்டையொன்றாக விளங்கும் குனாரின் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ஆறு போர் வீரர்கள் காணாமற் போயுள்ளதாகவும் அரசாங்கம் ஊர்ஜிதம் செய்துள்ளது. இதற்கு முன்னர் குனார் மாகாண ஆளுநருக்கான பேச்சாளரொருவர் இது குறித்து தெரிவிக்கையில்,
 
மேற்படி மோதலின் போது தலிபான்களால் ஏழு போர் வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினார். ஜனாதிபதி கர்சாய் நேற்று ஆரம்பிக்கவிருந்த இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் போது ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விடயங்கள் கலந்துரையாடவிருந்ததாக ஆப்கான் ஜனாதிபதியின் பேச்சாளரொருவர் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கில இணையத் தளமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். 
 
தொடர்பாடல் பணிப்பாளரும் ஜனாதிபதியின் பேச்சாளருமான அய்மால் பைஸி இது பற்றிக் கூறுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பொன்று ஜனாதிபதி கர்ஸாய்க்குக் கிடைத்ததன் பின்னர் இலங்கைக்கான அவரது விஜயமானது முதலாவது இராஜாங்க விஜயமாகவே மேற்கொள்ளப்படவிருந்ததாகவும் அந்த விஜயத்தின் போது இரு நாட்டு அமைச்சர்களுக்கிடையேயான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேலும் ஒரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவிருந்ததாகவும் குறிப்பிட்டார். 
 
மேற்படி விஜயத்திற்கான புதிய திகதியொன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

Post a Comment

 
Top