பன்னிரு திருமுறைகள் வழியே சைவ சமயத்தின் சிறப்பு, பெருமை, நெறிமுறைகள், இவைபற்றி அனைவரும் நன்கு தெளிவாக அறிந்து கொள்ளுதல், திருமுறைகளை ஓதிப் பயன் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் முப்பத்து மூன்றாம் திருமுறை மாநாடு 2013 ஜூலை 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களிலும் சிங்கப்பூர் டேங் சாலை அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டின் ஓர் அங்கமான அறுபத்து மூவர் குருபூசை விழா மட்டும் செரங்கூன் நார்த் அவின்யூ ஒன்று சாலையிலுள்ள அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயப் பல்நோக்கு மண்டபத்தில் 28 ஞாயிற்றுக் கிழமை காலை 8-45 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத் தலைவர் ஆர். ராஜாராம் பங்கேற்று சிறப்புரை வழங்கினார்கள். தமிழ்நாடு தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் கோ. ப. நல்லசிவம் மூன்று நாட்களிலும் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். இறையுணர்வு ஊட்டும் பல கருத்துக்களைக் கூறித் தமது வெங்கலக் குரலாலும் இசை ஞானத்தாலும் அனைவரையும் கவர்ந்து, மாநாட்டுக்கு அவர் மேலும் சிறப்புச் சேர்த்தார்.
விசாகப்பட்டினத்திலிருந்து வந்த எழுத்தாளர் வி திவாகர் சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூர் கவிஞர் அ.கி.வரதராசன் காரைக்கால் அம்மையார் வரலாற்றினை வெண்பாவில் இயற்றினார். வெங்கட், 'மூவர்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். திருமுறைத் தொண்டர் பட்டம், வை.தேவராசாவுக்கு வழங்கப்பட்டது.
ஒதுவா மூர்த்திகளின் திருமுறைக் கச்சேரி, போட்டிகளில் பரிசு பெற்ற மானவர்களின் பேச்சு, திருமுறை ஓதுதல், திருமுறைக் கவியரங்கம் , கேள்வி பதில் அரங்கம், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் (சுமார் 400க்கும் மேற்பட்டவை) வழங்கல் என்று பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளாக நடைபெற்ற மாநாட்டில், அரங்கம் நிரம்பி வழியும் அளவு மக்கள் கூடி அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கேட்டு களித்து ஆரவாரித்து மகிழ்ந்தார்கள்
