சிங்கப்பூரில் 1987-ல் தொடங்கப்பட்ட "இந்தியன் இன்ஸ்ட்ருமென்டல் என்சம்பிள்' அமைப்பு, பாரம்பரியமான இந்திய இசை வடிவங்களில் இருக்கும் உன்னதத்தை விளக்கும் வகையில் "தேஷ்' இசை நிகழ்ச்சியை அண்மையில் சிங்கப்பூரில் நடத்தியது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலாசார மையத்தில் இந்தாண்டு நடத்தப்பட்ட தேஷ் இசை நிகழ்ச்சி, வெள்ளி விழா நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
37 இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை லாசர் தருக்கல் செபாஸ்டியன், பானுமதி ஆகியோர் சீரிய முறையில் தலைமையேற்று நடத்தினர்.
தேஷ் இசை நிகழ்ச்சியில் கர்நாடக இசையின் இனிமையும் ஹிந்துஸ்தானி இசையின் இனிமையும் ஒருங்கே இணைந்திருந்தன. இரண்டு இசை வடிவங்களிலும் இசையமைக்கப்பட்ட பாடல்கள் பல விழாவின்போது பாடப்பட்டன.
அசாமிய கிராமியப் பாடல், யமன் ராகத்தில் அமைந்த ஹிந்துஸ்தானி டரானா, அகிர் பைரவியில் அமைந்த ஒரு கன்னடப் பாடல், புன்னகவராளி ராகத்தில் அமைந்த ஒரு தியாகராஜ கீர்த்தனை, ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த அண்ணாமலை ரெட்டியாரின் ஒரு காவடி சிந்து பாடல், தேஷ் ராகத்தில் லால்குடி ஜெயராமனின் தில்லானா ஆகியவை நிகழ்ச்சியின் போது இசைக்கப்பட்டது. நிகழ்ச்சி நடந்த ஒருமணி நேரமும் இந்திய இசை தேனிசையாய் ரசிகர்களின் காதில் பாய்ந்தது!
