மேற்கு ஜேர்மனியில் பிராங்பூட்டிலுள்ள 380 அடி உயரமான பழைய பல்கலைக்கழக கட்டிடமொன்று கட்டுப்பாட்டின் கீழ் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
41 ஆண்டுகள் பழைமையான மேற்படி 50,000 தொன் நிறையுடைய அபி கோபுர கட்டிடத்தில் 32 ஆவது மாடியில் 1500 துளைகள் இடப்பட்டு அவற்றினுள் 950கிலோ கிராம் நிறையுடைய வெடிபொருட்கள் உட்செலுத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இது வெடி வைத்து தகர்க்கப்பட்ட ஜரோப்பாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக விளங்குகிறது.
அந்தக் கட்டிடம் வெடி வைக்கப்பட்டு 10 செக்கன்களில் தரைமட்டமாகியது.
மேற்படி கட்டிடத்தின் தகர்ப்பின்போது அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 4 மீற்றருக்கு உயரமான தடுப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
இந்த வெடிப்பின்போது ஏற்படும் புகை மற்றும் சாம்பரால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அதன் மீது பெருமளவு நீர் பிரயோகத்தை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த தகர்ப்பு நடவடிக்கையையொட்டி அந்த கட்டிடத்தைச் சூழவுள்ள 250 மீற்றர் தூரத்துக்குள் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த இடத்தில் இரு புதிய அலுவலகக் கட்டிடங்கள் இரண்டை அமைக்கும் நோக்கிலேயே இந்த தகர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
