(ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்)
மனித உரிமை பிரச்சினையை மேற்குலகம் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி நாடுகளின்
உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை கடுமையாக எதிர்க்கின்றோம் என அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.
அத்தோடு மனித உரிமைகள் தொடர்பாக அனைத்து நாடுகளையும் நியாயமாக நடக்க வேண்டுமென்றும் அரசு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல கேள்வி நேரத்தின் போது ஐ.தே. கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச இன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கேட்ட கேள்விக்கு அரச தரப்பில் பதில் வழங்கிய போதே அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இணங்கிய சர்வதேச உடன்படிக்கைகள் யாவை? சர்வதேச மனித உரிமைகள் இணங்கிய உடன்பாடுகள் என்ன என்ற கேள்வியை முன்வைத்த போதே அமைச்சர் பீரிஸ் மேற்கண்ட பதிலை வழங்கினார்.
இதற்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் பீரிஸ் இலங்கையின் அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களிலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டே வருகின்றன.
ஐ.சீ.சீ.ஆர்.பி. உடன்படிக்கையும் நாட்டில் அமுலில் உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்று அது தொடர்பிலான பிரேரணையையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எமது அரசாங்கம் சிறந்த முறையில் மனித உரிமைகளை பாதுகாத்து வருகின்றது. இதற்கான சட்டங்களை நாமே நிறைவேற்றியுள்ளோம். எந்தவொரு அரசாங்கமும் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை.
