(ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்)
1971ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இளைஞர்கள் விரக்தியடைந்ததன் காரணமாக ஜே.வி.பி. கலவரம் உருவானது. 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கைச் சேர்ந்த இளைஞர்கள் விரக்தியடைந்ததையடுத்து ஆயுதக்கலவரம் தோற்றுவிக்கப்பட்டது. இதுபோன்ற விரக்திநிலை ஒன்று இன்று மலையக இளைஞர்களிடையே ஏற்பட்டு வருகின்றது. இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு,
மூவின மக்களும் சேர்ந்து வாழ வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பிரிவினைவாதங்கள் தேவையில்லை. அநாவசியமான பிரிவினைவாதங்களை அகற்றி அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் மறந்துவிட முடியாது.
ஒரு காலத்தில் இந்த நாட்டில் இளைஞர்கள் விரக்தியடைந்து தங்களது போக்கை மாற்றிக்கொண்ட சூழ்நிலையும் இருந்தது. 1971ஆம் ஆண்டிலே இளைஞர்களின் விரக்தி காரணமாக ஜே.வி.பி. கலவரம் ஆரம்பித்தது. 30 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலே இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக இருந்தது இளைஞர்களுடைய விரக்தி. அதேபோல இன்று மலையகத்திலும் இளைஞர்கள் மத்தியில் விரக்தியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால் அவர்களுக்கு மாற்று வழியை காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது அந்த இளைஞர்களுக்கு சரியான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்
