நாட்டில் 9 இலட்சத்து 68 ஆயிரம் பேர்
விவசாய ஓய்வூதியம் பெற தகுதி பெறவுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து 28
ஆயிரம் பேர் மாதாந்த ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் சுக
துக்கங்கள் பற்றி அக்கறை செலுத்தும் ஒரு தலைவர் இந்நாட்டில் இருப்பதால்தான்
இத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்கின்றன என பிரதி பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
மாத்தளை ஹோட்டல் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு
ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
மாதாந்தம் விவசாயிகள் ஓய்வூதியத்துக்காக ஆயிரம் மில்லியன் ரூபா
பெறப்படுகின்றது. இதற்கிணங்க 60 - 63 வயதுக்கிடைப்பட்டோருக்கு மாதாந்தம்
ஆயிரம் ரூபாவும் 64 - 70 வயதுக்கிடைப்பட்டோருக்கு 1250/=, 71 - 78
வயதுக்கிடைப்பட்டோருக்கு இரண்டாயிரம் ரூபாவும் 78 வயதுக்கு மேற்பட்டோருக்கு
5000/= ரூபாவும் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
1987ஆம் ஆண்டு ஐ.தே.க ஆட்சியில் விவசாய அமைச்சராகவிருந்த காமினி
ஜயசூரியவால் விவசாய ஓய்வூதியத் திட்டம் முதன்முதல்
அறிமுகப்படுத்தப்பட்டாலும் இத்திட்டம் முறையாக்கப்படாத காரணத்தால்
செயலிழந்திருந்தது. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் மேற்படி திட்டத்துக்கு
புத்துயிரளித்திருப்பதால் விவசாயிகள் அரசாங்கத்துக்கு நன்றியுடையவர்களாக
இருக்க வேண்டுமென்றார்.

Post a Comment