சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதனை மீறி ஏற்படுத்தப்பட்டால் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்வை விரும்பவில்லை. மாறாக அழிவையே விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்ற விதத்தில் சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு ஊடாகவே இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழேயே அரசியலமைப்பு உள்ளது.
எனவே சிங்கள மக்கள் இவ் சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எதிர்ப்பார்கள்.
அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இவ்வாறானதொரு அரசியலமைப்பை ஏற்படுத்த மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே இதனை மீறி செயல்பட ஜனாதிபதியால் முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைக்காக வடக்கு தமிழ் மக்களுக்காக தனிப்பட்ட விதத்தில் எதனையும் செய்ய முடியாது.
இதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தெற்கில் மோதல்கள் வெடிக்கும் சூழ்நிலைகள் உருவாகும். 30 வருட காலம் யுத்தத்தால் பல அழிவுகளை சந்தித்தோம். இனி மேலும் அழிவுகள் வேண்டாம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஆனால் கூட்டமைப்பினருக்கு தீர்வுகளை காண வேண்டும் என்ற அக்கறை கிடையாது. மாறாக அவர்களுக்கு நாட்டில் அழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்பதும் தனித் தமிழீழ கொள்கை நிறைவேற வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளனர்.
சந்திரிக்கா
சமாதானத்தையே விரும்பினேன். ஆனால் இன்று ஒரு தனிக்குடும்பம் அதிகாரங்களை தன் வசம் வைத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க இந்தியாவில் தெரிவித்திருப்பதும்
ஹரிஹரன்
அதேபோன்று இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் முன்னாள் தளபதி ஹரிஹரன் இலங்கை இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறியிருப்பதும் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இலக்கு வைத்த கருத்துக்களாகுமென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

Post a Comment