GuidePedia

0
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பசியால் பிரிவினை அரசியலை கையில் எடுத்து பா.ஜ., விஷ விதைகளை விதைத்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டி உள்ளார்.
வடக்கு கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சோனியா, பா.ஜ.,வையும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் கடுமையாக தாக்கி பேசினார்.
சோனியா குற்றச்சாட்டு : ஏராளமான முனிவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி, இந்தியா. ப்லவேறு கலாச்சாரங்களின் அடையாளமாக விளங்கும் இந்த நாட்டில், சிலர் பிரிவினை அரசியல் செய்து விஷ விதைகளை விதைத்து வருகின்றனர் அத்தகையவர்களுக்கு மக்கள் இடம் அளிக்கக் கூடாது.
அரசியல் விளையாட்டின் காரணமாக வன்முறையையும் சிலர் தூண்டி வருகின்றனர்; பா.ஜ.,வுக்கும் இன்னும் சில எதிர்க்கட்சிகளுக்கும் ஆட்சியில் அமர வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே நோக்கம்; தன்னை பற்றிய பெருமைகளை கூறுவதிலேயே சிலர் பிஸியாக உள்ளனர்; அவர்களா நாட்டிற்கு நல்லது செய்வார்கள்?; நிச்சயமாக ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஆட்சியை பிடிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அதற்காக அவர்கள் பல்வேறு சதி வேலைகள் செய்து வருகின்றனர்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு சோனியா கூட்டத்தில் பேசினார்.
காங்கிரசிற்கு புகழாரம் : காங்கிரஸ் ஒருபோதும் அதிகாரத்தை யாசிக்கவில்லை; நாட்டை பற்றியும், மக்களை பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது; நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் எனவும், ஏழைகளுக்கு சுயமரியாதையை பெற்று தர வேண்டும் எனவும் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது; சமூகத்தில் சகோதரத்துவத்தையும், அமைதியையும் கொண்டு வரவே காங்கிரஸ் விரும்புகிறது; வேகமான வளர்ச்சியை நாடு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் அரசு பாடுபட்டு வருகிறது; ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என உறுதி பூண்டுள்ளதாலேயே தகவல் அறியும் உரிமை சட்டத்தையும், லோக்பால் சட்டத்தையும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது; ஆனால் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுடன், தவறான குற்றச்சாட்டுக்களையும் கூறி வருகின்றன;
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசு ஊழல் செய்ததாலேயே மத்திய அரசின் மகாத்மா காந்திய தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கர்நாடகா மக்களை வந்தடையவில்லை; ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது; பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஐதராபாத்திற்கும், கர்நாடகாவிற்கும் சிறப்பு அந்தஸ்து தர மறுத்தது;
ஆனால் காங்கிரஸ் அரசு அதனை அளிக்க சட்ட திருத்தம் கொண்டு வந்தது; ஐதராபாத்-கர்நாடகா எல்லையில் இருக்கும் மக்களுக்கு பிரகாசமாக எதிர்காலத்தை ஏற்படுத்த காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது; இது குறித்து ராகுல் ஏற்கனவே உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு காங்கிரசின் பெருமைகளை சோனியா கூறினார்.
பா.ஜ., பதிலடி : சோனியாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் குறித்து மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 2007ம் ஆண்டு குஜராத் தேர்தலின் போது நரேந்திர மோடிக்கு எதிராக தவறாக குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது; 2014 தேர்தலிலும் அதே போன்றதொரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து வெற்றி பெற காங்கிரஸ் நினைக்கிறது; இதற்கு மக்கள் பதில் கூறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top